Ad Widget

குறுந்தகவல் மற்றும் இணையத்தளம் ஊடான தேர்தல் பரப்புரைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு பேஸ்புக் மற்றும் மின்னஞ்சல் ஊடாக தேர்தல் பரப்புரைகளைத் தவிர்க்குமாறு தேர்தல் கண்காணிப்பாளர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

தேர்தலுக்கான பிரதான பரப்புரைகள் நிறைவடைந்துள்ள போதிலும், இணையத்தளம் ஊடான பரப்புரைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கையடக்கத் தொலைபேசியூடாக குறுந்தகவல் மூலம் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு இணையத்தளம் ஊடான பரப்புரைகளை தவிர்க்குமாறு தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் தேசிய அமைப்பாளர் ரசாங்க ஹரிஸ்சந்திர குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகள் அனைத்தும் நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ள போதிலும், தேர்தலுக்கு முன்னரான சூனிய காலப்பகுதியான 48 மணித்தியாலங்களுக்கு இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்களின் மூலமும் சட்டவிரோத பரப்புரைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் சூனிய காலப்பகுதியான இந்த இரண்டு நாட்களிலும் வாக்காளர்கள் தமது வாக்குரிமை குறித்து தீர்மானம் மேற்கொள்வதற்கு இடமளிக்கும் வகையில் குறுந்தகவல் மற்றும் இணையத்தளம் ஊடான பரப்புரைகளை நிறுத்திக்கொள்ள வேண்டுமென பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts