எதிர்வரும் 17.08.2015 அன்று இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை….
எதிர்வரும் 17.08.2015 அன்று இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக ஒன்றுக்கொன்று முரணான நிலைப்பாடுகளை வெவ்வேறு அரசியற் கட்சிகள் மட்டுமின்றி ஒரே கட்சியின் வெவ்வேறு வேட்பாளர்களும் வெளியிட்டு வருகின்ற நிலையில் ‘‘மெய்ப் பொருள் காண்பது அறிவு” என்பதை மகுடவாசகமாக கொண்ட யாழ் பல்கலைக்கழகத்திற்குள் இயங்குகின்ற ஒரு அமைப்பு என்ற வகையில் பல்கலைக்கழக சமூக அங்கத்தவர்களையும், யாழ் மாவட்ட வாக்காளர்களையும் நோக்கி எமது வேண்டுகோளை விடுக்க கடமைப்பட்டுள்ளோம்.
அன்புக்குரிய வாக்காளப் பெருமக்களே…!
யாழ் மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் ஆகியவற்றுடன் ஒப்பிடுகின்ற போது இம்முறை வாக்களிப்பு வீதம் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
வாக்களிப்பு வீதத்தை அதிகரிப்பதற்காகவும், செல்லுபடியாகாத வாக்குகளை குறைப்பதற்காகவும் பல்வேறு திட்டங்களை சிவில் சமூக அமைப்புக்கள் முன்னெடுத்துவரும் நிலையில் யாழ் மாவட்டத்தில் வாக்களிக்கும் ஆர்வம் குறைவாக இருந்தால் அது மிகவும் வருந்தத்தக்கதே.
மக்களின் வாக்களிக்கும் ஆர்வம் இங்கு குறைவாக காணப்படுகின்றமைக்கு மக்கள் தாம் வழமையாக வாக்களிக்கும் கட்சிகள் பால் நம்பிக்கையை இழந்துள்ளமையே மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.
தாம் வாக்களிக்கும் கட்சிகளில் மக்கள் நம்பிக்கை இழந்தமைக்கு அக்கட்சிகள் தேர்தல் காலங்களில் மக்களை கவரும் வகையில் தமது நிலைப்பாடுகளை வெளிவிடுவதும் தேர்தல் முடிந்த பின்னர் ஆட்சியாளரை அல்லது அதிகாரம் செலுத்தும் வேறு சக்திகளை திருப்திப்படுத்துவதற்காக வேறு நிலைப்பாடுகளை எடுப்பதும் முக்கிய காரணமாகும்.
ஆனால் நீங்கள் பொதுத் தேர்தலில் வாக்களிக்காமல் ஒதுங்கிக் கொள்வதால் நிலைமைகள் மேலும் மோசமடையவே செய்யும். நீங்கள் வழமையாக வாக்களிக்கும் கட்சியொன்றிற்கு மாறாக மாற்றுத் தெரிவொன்றை நீங்கள் தெரிவு செய்து அக்கட்சிக்கு வாக்களிப்பதன் மூலமே நீங்கள் காத்திரமான பங்களிப்பு செய்யமுடியும். யாழ் மாவட்டத்தில் பல அரசியற் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் இத் தேர்தலில் போட்டியிடுகின்றன. இவர்களில் நீங்கள் வாக்களிக்கும் கட்சியை தெரிவு செய்வதற்கு பின்வரும் அம்சங்களை கவனத்திற் கொள்வது அவசியமெனக் கருதுகின்றோம்.
- எமது தேசிய இனப் பிரச்சினை தீர்வு தொடர்பான தெளிவான உறுதியான கொள்கையுடைய கட்சி.
- எமது பாரம்பரிய பிரதேசத்தின் இனப் பரம்பல், விகிதாசாரத்தை திட்டமிட்டு குலைக்கும் அரச ஆதரவு குடியேற்றங்களை நிறுத்துவது தொடர்பான அக் கட்சியின் நிலைப்பாடு.
- 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை பலிகொண்ட போர் தொடர்பான சர்வதேச போர்க்குற்ற விசாரணை தொடர்பான அக் கட்சியின் நிலைப்பாடு.
- போர்ச் சூழ்நிலைகளில் தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயரவைக்கப்பட்ட மக்களின் மீள் குடியமர்வு தொடர்பான அக்கட்சியின் நிலைப்பாடு
- இன்னமும் அரசியற் கைதிகளாக சிறைகளிலும், பல்வேறு தடுப்பு முகாம்களிலும் வாடும் நூற்றுக்கணக்கானோரின் விடுதலை மற்றும் காணாமற்போனோர் தொடர்பான அக்கட்சியின் நிலைப்பாடு.
மேற்படி விடயங்கள் தொடர்பான 2010-2015இற்கு இடைப்பட்ட காலத்தில் இங்கு இடம்பெற்ற மூன்று பெரிய தேர்தல்களிலும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களையும், கட்சியில் ஒவ்வொரு வேட்பாளரும் மாறுபட்ட நிலைப்பாடுகளை வெளியிட்டதுமான கட்சிகளை எவ்வித தயக்கமுமின்றி நீங்கள் நிராகரியுங்கள். மேற்படி ஐந்து முக்கிய விடயங்களிலும் தெளிவான ஒருமித்த நிலைப்பாட்டை கொண்ட கட்சியையும் அதன் வேட்பாளர்களையும் ஆதரித்து வாக்களியுங்கள்.
தமது கட்சிக்குள்ளேயே தமது கொள்கை நிலைப்பாடு பற்றிய கருத்தியல் ஒற்றுமையை காணமுடியாத கட்சிகள் தமது தேர்தல் வெற்றிக்காக மக்களை ஒன்றுபட்டு தமக்கு வாக்களிக்குமாறு கோருவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
வேலைவாய்ப்புகளை வழங்குவது அரசின் கடமையாகும். சலுகைகளுக்காகவும் வேலைவாய்ப்புகளுக்காகவும் வாக்களிக்காதீர்கள். அவ்வாறு வாக்களிப்பது நல்லாட்சிக்கு கேடு விளைவிக்கும்.
உங்கள் விருப்பத்திற்குரிய கட்சிக்கு மேற்கூறிய காரணங்களால் வாக்களிக்க விரும்பாவிட்டால் தேர்தலில் வாக்களிப்பதிலிருந்து ஒதுங்கியிராதீர்கள். மாற்றுத் தெரிவை நாடுங்கள்.
இதுவே யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் வேண்டுகோளாகும்.
நன்றி.
தலைவர், இணைச்செயலாளர்
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
யாழ். பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்
12-08-2015