“போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மை அறியப்படவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பரிகாரம் வழங்கப்படவேண்டும். அவ்வாறான நிலைப்பாடு இருந்தாலே நாட்டில் நல்லாட்சி ஏற்படும். உண்மை அறியப்பட்டதும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு வேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் வவுனியா கலைமகள் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டின் இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். இது முக்கியமான பிரச்சினை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பதில் வழங்கப்படவேண்டும். மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். சுதந்திரமான தேர்தல் முறைமைக்குப் பின் எமது பிரச்சினைக்கு ஒரு சர்வதேச விசாரணை நடைபெறவேண்டும்.
எமக்கு ஓர் அரசியல் தீர்வு தராவிட்டால் இன அழிவு ஏற்படும். சர்வதேசம் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும். அதுதான் எங்கள் செய்தி. இந்தத் தேர்தலில் தமிழ் மக்களாகிய உங்கள் வாக்கு தெளிவான செய்தியை வெளிப்படுத்தவேண்டும்” – என்றார்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், எஸ்.வினோநோகராகலிங்கம், சி.சாந்தி, இ.சார்ள்ஸ், றோய் ஜெயக்குமார், ப.செல்லத்துரை, க.சிவநேசன், சி.சிவமோகன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளருமான த.சித்தார்த்தன், வடமாகாண கல்வித்துறை அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண போக்குவரத்து – மீன்பிடித்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன், வடமாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினர்களான ம.தியாகராஜா, எம்.பி.நடராஜ், ஜி.ரி.லிங்கநாதன், கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.