தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற ஒரேயொரு தமிழ் கட்சி. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அங்கீகாரத்தை பெற்ற விசுவாசத்தை பெற்ற கட்சியாக சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என தமிழ் தேசிய்ககூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா கலைமகள் விளையாட்டு திடலில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்னவென்று இந்த நாட்டிலும் சர்வதேசத்திற்கும் தெளிவாக தெரியும். அதற்காக ஆரம்பத்தில் ஜனநாயக ரீதியாக சாத்வீக ரீதியாக ஒப்பந்தங்களை செய்தோம் ஒத்துழைப்புகளை வழங்கினோம். ஆனால் அது கைக்கூடாது விட்டாலும் கூட பெரும்பான்மை தலைவர்களால் அவை பிற்போடப்பட்டது. ஆனால் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சனை அவர்களுக்கு தெரியும்.
வடக்கு கிழக்கை பொருத்தவரை தமிழ் மக்கள் அந்த பிராந்தியத்திற்கு விசேட அக்கறை கொண்டவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அது மாத்திரமின்றி தந்தை செல்வா கொண்ட கொள்கையின் அடிப்படையில் இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்கள் ஒரு தனி தேசிய இனம். அவர்கள் சரித்திர ரீதியாக இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றார்கள்.
இந்நிலையில் இவ்வாண்டு ஆரம்பத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, எமது விடயம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சர்வதேச மயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறுகின்றது.
தமிழ் தேசியப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். இதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு நாடாளுமன்ற குழுக்கள் நிபுணர் குழுக்கள் பல்வேறு அறிக்கைகள் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டு ஓர் அரசியல் தீர்வை எடுப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
அவை தொடர்பாக ஓர் சமரசம் ஒருமைப்பாடு இருந்தாலும் கூட அரசியல் சாத்தியத்தின் ஊடாக அவை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் இடம்பெறவுள்ள இந்த தேர்தல் மிக முக்கியமானதொன்றாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.