வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் வெளிவந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படவேண்டும் என சில கட்சிகள் திட்டமிட்டுச் வெளிப்படுத்தும் வதந்தியான விடயமே இதுவெனவும் வடமாகாண அவைத்தலைவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது தான் நடுநிலை வகிக்கப்போவதாக வட மாகாண முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதனால், கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக வடமாகாண அவைத்தலைவர் தலைமையிலான 18பேர் கொண்ட வடமாகாண சபை உறுப்பினர்கள் குழாம், முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவர தீர்மானித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இது தொடர்பில் அவைத்தலைவரிடம் விளக்கம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த சிவஞானம், ‘கூட்டமைப்புக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கு பலர் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றனர்.
இவ்வாறான செய்திகளை பரப்புபவர்கள் யார் என்பது எமக்கு நன்றாகத் தெரியும். முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாங்கள் ஏன் கொண்டு வரப்போகின்றோம்’ என்றார்.
அத்துடன், ‘தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக சிலர் திட்டமிட்டு வெளியிட்ட செய்தி இதுவாகும். இதனால் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை. இதனைப் பெரிதாக்கி கதைப்பதற்கு எவ்வித அவசியமும் இல்லை’ என்று அவர் மேலும் கூறினார்.