நெடுந்தீவு முகிலனின் வெள்ளைப் பூக்கள் என்ற குறுந்திரைப்படம், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி யாழ் ஞானம்ஸ் உல்லாச விடுதியில் 08-03-2012 வியாழக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது. காலை 11 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில், மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து, யாழ் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி விநோதினி சிறீ மேனன் வரவேற்புரையையும், அறிமுக உரையினை ரி.கிருபாகரனும் (இலண்டன்), தலைமை உரையினை தேசிய இளைஞர் சேவை மன்னறத் தலைவர் ஈஸ்வரராஜாவும் நிகழ்த்தினர்.
2012ம் ஆண்டு 101வது சர்வதேச மகளீர் தினம் கொண்டாடப்படும் வேளையில், யாழ்ப்பாணத்தில் பல பெண்கள் முக்கிய உயர் பதவிகளில் உயர்நிலை அதிகாரிகளாக இருப்பதை நினைவுகூர்ந்த அவர், இந்த நிலை தொடர்ந்து பெண்கள் மேலும் வாழ்வில் முன்னேறி வளம்பெறும் நிலை ஏற்படவேண்டும் என்று, இளைஞர் சேவைகள் மன்ற பிரதிப் பணிப்பாளர் த.ஈஸ்வரராஜா இங்கு தெரிவித்தார்.
தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய சிகரம் ஊடக இல்லப் பணிப்பாளர் கோ.றுஷாங்கன், மகளிர் தினம் அனுட்டிக்கப்படும் காலகட்டத்தில், பெண்களுக்கெதிரான மோசமான வன்முறைகள் பல யாழ்ப்பாணத்தில் நடந்தேறி வருவது வேதனைக்குரியது என்று குறிப்பிட்டார்.
இத்தகைய வன்முறைகள் குறித்த புள்ளிவிபரங்களை வெறுமனே வெளியிட்டுக்கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டியதே அவசியம் என்று தெரிவித்தார். நெடுந்தீவு முகிலனின் வெள்ளைப் பூக்கள் அத்தகைய முயற்சிகளில் ஒன்று என்றும், இது போன்ற முயற்சிகளில் அனைவரும் ஈடுபட்டால் இந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றும் றுஷாங்கன் மேலும் இங்கு தெரிவித்தார்.
வெள்ளைப் பூக்கள் குறும்பட இறுவட்டை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன் வெளியிட்டு வைக்க கஜமுகன் ஹாட்வெயார் உரிமையாளர் ஈ.எஸ்.பி. நாகரத்தினம் பெற்றுக் கொண்டார். இந்தக் குறுந்திரைப்படத்தில் பங்களிப்புச் செய்த கலைஞர்களும் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.கணவன்மாரை இழந்த பெண்கள் மற்றும் தாய் தந்தையரை இழந்த பிள்ளைகளின் நலன்களுக்காகச் செயற்படுவதற்கென பூக்கள் என்ற அமைப்பை தாம் ஆரம்பித்திருப்பதாக இங்கு தெரிவித்த முகிலன், முல்லைத்தீவு அமைதிபுரம் தமிழ் வித்தியாலயத்திற்கு பூக்கள் அமைப்பு சார்பாக 20 ஆயிரம் ரூபா பணம் அன்பளிப்புச் செய்து வைத்தார்.