ஈழத்தின் முதல் தமிழ்ப் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரிய பிரபாலினி பிரபாகரனின் ‘குயின் கோப்ரா’ இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கங்கை அமரன், பாடகர் மாணிக்க விநாயகம், ஸ்ரீகாந்த் தேவா, பரமேஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குயின் கோப்ரா இசை ஆல்பத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
பிரபாலினி பாடகி, கவிஞர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், அறிவிப்பாளர் குறும் பட இயக்குனர் என்று பல துறைகளில் ஈடுபட்டு வரும் ஒரு இலங்கை தமிழ் மகள் ஆவார்.
இவர், தனது குயின் கோப்ரா இசை ஆல்பத்திற்கு இசை அமைத்ததோடு, அதன் அனைத்துப் பாடல்களையும் மற்ற பாடகர்களோடு இணைந்துப் பாடவும் செய்துள்ளார்.
இந்த ஆல்பத்தில், ‘என்ன செய்தேன் எனை திரும்பி பார்த்தாய், என்ன செய்தேன் எனைத் திருடி சேர்த்தாய்… என்ன செய்தேன் எனை வருடி ஈர்த்தாய் அறியாமல் தவித்தேனடா , புரியாமல் ரசித்தேனடா… ‘ என்றொரு பாடல் உள்ளது. இந்தப் பாடலை கிரீஷுடன் சேர்ந்து பாடியுள்ளார் பிரபாலினி.
இந்த ஆல்பத்தில் உள்ள ஒவ்வொரு பாடலும் இனிமையாக இருப்பதாக பிரபாலினியின் பேஸ்புக் பக்கத்தில் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மெல்லிசை இன்பமும் கலந்த காலத்திற்கேற்ற படைப்பு என அவர்கள் பாராட்டியுள்ளனர்.
குயின் கோப்ரா தான் சர்வதேச அளவிலான முதல் இந்திய ஆல்பம் எனக் கூறப்படுகிறது.