இந்து மக்களின் வரலாற்றுப் மகிமை வாய்ந்த கீரிமலைக் கேணி அழிவடையும் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனை உடனடியாக திருத்தி அதனுடைய வரலாற்றையும் மற்றும் இந்து கலாசார மரபுகளையும் காப்பாற்ற வேண்டிய அவசியமும் தேவையும் தற்போது எழுந்துள்ளது.
சுனாமி அனர்த்தத்தினால் கீரிமலைக் கேணியும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. அந்த வேளையில் கேணியின் சுவர்கள் உடைந்து சேதமடைந்ததுடன் கேணியின் படிக்கட்டுக்களும் கூட சேதமடைந்திருந்தன.
ஆனாலும் கேணியின் சுவர்கள் மீள அமைக்கப்பட்டு திருத்தப்பட்ட போதிலும் கேணியின் பாதிக்கப்பட்ட படிக்கற்கள் திருத்தப்படாத நிலைமை காணப்பட்டது. நீண்டகாலமாகிய நிலையில் தற்போது சேதம் அடைந்த பகுதிகள் ஊடக கடல் கேணியினுள் உட்புகுவதனால் கேணியின் சுற்றாடல் பகுதி கடல் அரிப்புக்கு உள்ளாகத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக கேணியின் படிக் கற்கள் உடைந்து கேணியினுள் விழத் தொடங்கியுள்ளன. இத்தகைய நிலைமையில் ஆண்கள் குளிக்கும் கேணியில் உடனடியாக உடைந்து வீழ்ந்த கற்களை தூக்கி வைத்து கட்டுவதுடன் குறிப்பிட்ட கேணியை வரலாற்று தன்மை மாறாத நிலையில் திருத்தப்பட வேண்டியவையும் அவசியமும் எழுந்துள்ளது.
இதனையிட்டு வலி.வடக்கு பிரதேச சபை வட மாகாண சபை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் உரிய கவனம் எடுத்து இதனை திருத்த வேண்டும் இல்லையென்றால் உரிய இந்து அமைப்புக்கள் ஆலயங்கள் தமது நிதியில் இருந்தேனும் இதனை திருத்தி கலாசார பண்புகள் மரபுகள் கெடாது பாதுகாக்க வேண்டிய அவசியம் உடனடியாக எழுந்துள்ளது என இந்து மக்கள், பெரியவர்கள் எனப் பலரும் தெரிவிக்கின்றார்கள்.