இறுதிக்கட்டப்போரின்போது வெள்ளைக்கொடியுடன் படையினரிடம் சரணடைய வந்தவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், போர்க்களத்தில் பாலியல் ரீதியான சித்திரவதைகள் ஆகியன போர்விதிமுறைகளை மீறும் செயல்களாகும். எனவே, போர் முன்னெடுப்பு என்ற போர்வையில் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு சார்பாக அரசு ஒருபோதும் நிற்காது – இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
கேள்வி நேரத்தின்போது, போர்க்குற்ற விசாரணை தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியவை வருமாறு:-
இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணைப் பணியகத்தின் அறிக்கை முதலில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படும்.
அதை அவர் அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு எவ்வாறு எதிர்கொள்வது என்பதுபற்றி கலந்துரையாடுவார்.
இதுவிடயம் பற்றி பாதுகாப்பு ஆலோசனைக்குழுக் கூட்டத்திலும் ஆராயப்படும். அதன்பின்னர், அரசால் ஏற்கப்படும் விடய ங்கள் எவை, ஏற்றுக்கொள்ளமுடியாத விடயங்கள் எவை என்று ஜனாதிபதியால் அறிவிக்கப்படும். செப்டெம்பர் மாத அமர்வின்போது அரசின் நிலைப்பாடு வெளியிடப்படும்.
சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான விசாரணைப் பொறிமுறையொன்றை நாம் அமைப்போம். இதையே சர்வதேச சமூகமும் வலியுறுத்தி வருகின்றது.
குறிப்பாக, போர் தொடுக்கப்படும்போது ஏற்படுகின்ற உயிரிழப்புகள் போர்க்குற்றமாகா. எனினும், போர் தொடுப்பு என்ற போர்வையில் இடம்பெறும் சித்திரவதைகள் குற்றங்களாகும்.
வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்தவர்கள் சுட்டுக் கொலைசெய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை, வன்புணர்வுகள் ஆகியன தவறான செயல்களாகும். இவற்றுடன் தொடர்புடையவர்களுக்கு சார்பாக அரசு செயற்படாது – என்றார்.