ஜனாதிபதி தேர்தலுக்கு அழைத்தமை தவறான முடிவு – மஹிந்த

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருந்த நிலையில், ஜனவரி 8ஆம் திகதியன்று ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தமையானது தவறான தீர்மானமாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பிபிசி சிங்கள சேவையின் ஊடகவியலாளருடன் நேற்று புதன்கிழமை நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பில் தற்போது நீங்கள், வருந்துகின்றீர்களா என எழுப்பிய கேள்விக்கு, சிரித்த முகத்துடன் பதிலளித்த அவர், ‘வருந்தவில்லை எனினும் அது தவறான முடிவாகும் என்று பலரும் என்னிடம் தற்போது தெரிவிக்கின்றனர்’ என்றார்.

ஜோதிடர் வழங்கிய ஆலோசனையின் பிரகாரமா இந்த முடிவை எடுத்தீர்கள் என்று கேட்டமைக்கு பதிலளித்த அவர், ‘இல்லை, இல்லை, இல்லை அவ்வாறில்லை. எங்களுடைய அமைச்சர்களும் எம்.பி.களுக்கு விரைவாக தேர்தலை நடத்துமாறு கூறினர்’ என்றார்.

அடுத்த பொதுத்தேர்தலில் 117 தொகுதிகளை வெற்றிகொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிகொள்ளும் என்பதனை தான் உறுதியாக கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அப்படி வெற்றிக்கொண்டால், பிரதமர் பதவிக்கு நீங்கள் நியமிக்கப்படுவீர்களா என்று கேட்டமைக்கு பதிலளித்த அவர், ‘அதனை அந்த நேரத்தில் பார்த்துக்கொள்வோம்’ என்றார்.

Related Posts