யாழ். மருத்துவ சங்கத்தின் உதவியுடன் மேற்க்கொள்ளப்பட்டு வந்த மருத்துவ முகாம்கள் நிர்வாக குளறுபடிகள் காரணமாக இடைநிறுத்தம் செய்யப்படகின்றன என யாழ்ப்பாணம் மருத்துவ சங்கத் தலைவரும் சமுதாய மருத்துவ நிபுணருமான முரளி வல்லிபுரநாதன் அறிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் வருமாறு:
யாழ். மருத்துவ சங்கம் வடக்கு – கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலவச மருத்துவ முகாம்களை வைத்தியர்களும் அடிப்படை வசதிகளும் அற்ற பிரதேசங்களில் 2013 இல் இருந்து நடத்தி வருகிறது.
முதலாவது மருத்துவ முகாம் 2013 ஓகஸ்ட் 28 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட குமுழமுனை பிரதேசத்தில் ஆரம்பித்து இது வரை 14 மருத்துவ முகாம்களை நடத்தியது பல மருத்துவ நிபுணர்களும் மருத்துவர்களும் இந்த முகாம்களில் இலவசமாக தமது சேவையை வழங்கியதுடன் இன்று வரை 2500 க்கும் அதிகமானோர் இதன் மூலமாக அனுகூலங்களைப் பெற்று இருக்கிறார்கள் .
மருத்துவ முகாம் நடக்கும் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர்கள் பெரும்பான்மையான மருந்துகளை வழங்கி இருந்ததுடன் சில மருந்துகளை பங்குபற்றிய வைத்தியர்களும் பரோபகாரிகளும் வழங்கி இருந்தார்கள்.
மருத்துவர்களும் மருத்துவ நிபுணர்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து செல்வதற்குரிய வாகனம் யாழ் மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனால் வழங்கப்பட்டு இருந்ததுடன் வாகனத்துக்குரிய எரிபொருள் செலவுகள் யாழ். மருத்துவ சங்கத்தினால் செலுத்தப்பட்டிருந்தது.
இந்தச் செலவுக்கும் முகாம்களில் பங்கு பற்றும் ஊழியர்களின் உணவுச் செலவு மற்றும் மேலதிக மருந்து ஆகியவற்கு ஆரம்ப காலங்களில் சர்வதேச மருத்துவ சுகாதார சங்கமும் பின்னர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வைத்தியர் சியாமளா அவர்களும் கன்பெர்ரா தமிழ் சங்கம் மற்றும் கத்தோலிக்க அமைப்புகள் ஆதரவு நல்கி இருந்தன.
இந்த நிலையில் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட புதிய யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் மருத்துவ முகாம்களுக்கு வாகனத்தை தந்துதவ உயரதிகாரியான மாகாண சுகாதாரப் பணிப்பாளரின் உத்தரவையும் மதிக்காமல் மறுத்து வருகிறார்.
இதனால் இவரது சமூகப் பொறுப்பற்ற தான் தோன்றித்தனமான செயற்பாடுகள் காரணமாக மருத்துவ முகாம்களை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது – என்றுள்ளது.