இலங்கையில் நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கே கூடுதல் ஆதரவு இருப்பதாக சென்டர் ஃபார் பாலிசி ஆல்டர்நேட்டிவ்ஸ் மேற்கொண்ட ஒரு கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் எந்த விஷயங்களில் கூடுதலாக கவனம் செலுத்துகிறார்கள், யாரை பிரதமர் பதவிக்கு கூடுதலாக ஆதரிக்கிறார்கள், எந்த ஊடகம் பிரச்சாரங்களில் பிரதான பங்கு வகிக்கிறது போன்ற பல அம்சங்களை உள்ளடக்கி மக்களிடம் கருத்துக் கேட்டு, அதன் முடிவுகளை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தின் கடைசி இரு வாரங்களில் இந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நாட்டின் அனைத்து 25 மாவட்டங்களிலும் நான்கு முக்கிய இனங்களைச் சேர்ந்த சுமார் 2,000 பேரிடம் கருத்துக் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் முடிவுகள் வெளியாகியுள்ளன என்று அந்த மையம் கூறுகிறது.
இது குறித்து பிபிசியிடம் பேசிய சென்டர் ஃபார் பாலிசி ஆல்டர்நேட்டிவிஸ் எனப்படும் மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் இயக்குநர் பாக்கியசோதி சரவணமுத்து, தேசிய அளவில் பார்க்கும்போது ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவே பெருவாரியான மக்களிடம் இருப்பது தெரிய வருகிறது என்று தெரிவித்தார்.
சிறுபான்மை மக்களைப் பொருத்தவரையில், தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழர்கள் என அனத்து தரப்பினரிடமும் ரணிலுக்கே கூடுதல் ஆதரவு இருப்பதாகவும் அவர் கூறினார்.
சிங்கள மக்களைப் பொறுத்தவரை, 36% பேர் ஆதரவு மஹிந்தவுக்கும் 32% பேரின் ஆதரவு ரணிலுக்கும் உள்ளது என சென்டர் ஃபார் ஆல்டர்நேட்டிவ்ஸ் கூறியுள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பு ஜூலை மாதத்தின் இறுதிப் பகுதியில் நடத்தப்பட்டது என்பதால், இந்தக் கருத்துக் கணிப்பின்படிதான், பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என்று உறுதிபடக் கூற முடியாது என்றும் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இத்தேர்தலில் போட்டியிட வேண்டுமா எனும் கேள்விக்கு 40% பேர் “ஆம்” என்றும் 42% பேர் அவர் போட்டியிடக் கூடாது என்றும் தெரிவித்தனர் எனவும் இந்தக் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, தொலைக்காட்சியே பிரதான தேர்தல் பிரச்சார ஊடகமாகவும் பார்க்கப்படுகிறது என்றும் இந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.