மகளிர் விவகார அமைச்சினால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பெருட்கள் உரிய முறையில் சுன்னாகம் பலநோக்கக் கூட்டுறவுச் சங்கத்தினால் வழங்கப்படுவதில்லையென நிவாரணத்தைப் பெறும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கை ஏற்படுத்தும் வகையில் பொருட்களை வழங்க வேண்டும் என்பது மகளிர் விவகார அமைச்சின் கட்டளையாகும். இதன் கீழ் நெத்தலிக் கருவாடு மற்றும் ரின் மீன் போன்றவைகள் கல்சியம் புரதம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளமையால் இதனை பிறக்கப் போகும் பிள்ளையின் வளர்ச்சி கருதி வழங்க வேண்டும் என்பதே அரசின் திட்டமாகும்.
ஆனால் இதற்கு மாறாக பற்றுச் சீட்டில் மீன்ரின், நெத்தலிக் கருவாடு எனக் குறிப்பிட்டு அதற்க்குப் பதிலாக அநாவசியமான சோடா, பிஸ்கட் போன்ற தமது இருப்பில் உள்ள பொருட்களை வழங்கி வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.
இதனை உரிய கிராம அலுவலர்கள் மற்றும் பிரதேச செயலக உயர் அதிகாரிகளும் கூட தெரிந்தும் தெரியாத நிலையில் கண் மூடி இருப்பதாகவும் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட நிவாரணங்களிலும் கூட இத்தகைய குழறுபடிகள் இடம் பெற்ற போதிலும் உரியவர்கள் நடவடிக்கை எடுக்காத நிலமையே இன்றும் காணப்படுவதாகவும் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.