நாட்டை பிரித்து வேறுபடுத்த ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை

நாட்டை விரும்பாத டொலர்களுக்கு வேலை செய்யும் சிவில் அமைப்புகளுக்கு மத்தியில் உண்மையில் நாட்டை நேசிக்கும் தேசிய அமைப்பு இருப்பது மகிழ்ச்சி என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிக்குகள் குரல் மற்றும் தேசிய ஒற்றுமை என்ற அமைப்புக்கள் இணைந்து கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.

அபிவிருத்தியின் போது பாரபட்சம் காட்டவில்லை என்றும் அனைத்து இனங்களுக்கும் பொறுப்பை நிறைவேற்றியுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

புதியதொரு நாட்டை கட்டியெழுப்புவது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் விஞ்ஞாபனத்தில் உள்ளதாகவும் வடக்கு கிழக்கு பிரிவுக்குப் பின் எஞ்சியுள்ள சிறிய பகுதி புதிய நாடாக இருக்கும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐக்கிய தேசியக் கட்சி எவ்வித உடன்படிக்கை செய்துள்ளதென்பது இரகசியம் என்றும் சமஷ்டி என்ற வடிவில் அது அமையுமா என்று தெரியாதெனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை ஒரு ஐக்கிய நாடாக முன்னோக்கி நகர வேண்டும் என்றும் நாட்டை பிரித்து வேறுபடுத்த ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related Posts