Ad Widget

தமிழ்த் தேசிய அங்கீகாரமே பிரச்சினைகளுக்குத் தீர்வு! தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறைகூவல்

தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படுவதற்கு நிலப்பரப்பு, தனித்துவமான மொழி, கலாசாரம் மற்றும் பொருளாதாரம் என்ற 4 விடயங்கள் அடிப்படையாக இருக்க வேண்டும். ஆனால் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும், போர் நிறைவடைந்த பின்னரும் எங்கள் தேசத்தின் அங்கீகாரத்தை சிதைப்பதற்காக, தேசத்தின் அங்கீ காரத்திற்கு அடிப்படையான விடயங்கள் மீதான கட்டமைப்புசார் இன அழிப்பு நன்கு திட்டமிட்டவகையில் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறான கட்டமைப்புசார் இன அழிப்பிலிருந்து எம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டுமானால் தமிழ்தேசம் அங்கீகரிக் கப்படவேண்டும். அதுவே அனைத்திற்கும் தீர்வு.

மேற்கண்டவாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற தேர்தல் யாழ்.மாவட்ட வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வல்வெட்டித் துறை ரேவடி மைதானத்தில் நடைபெற்ற கட்சியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில், எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடும், முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்தையும் வல்வெட்டித்துறை மண்ணில் எதற்காக நடத்தியிருக்கின்றோம் என பலர் நினைக்கலாம் அதற்கு காரணம் உள்ளது.

அதாவது விடுதலைப்போரின் இதயமாக இந்த மண் இருந்திருக்கின்றது. இங்கிருந்து உருவான அந்த தாகம் தமிழர் தாயகம் முழவதும் பரவி விடுதலைப்போருக்காக தமிழ் மக்களை ஒன்றிணைத்திருக்கின்றது. இந்த விடுதலை பயணத்தில் நாம் பல இன்னல்களை சந்தித்திருக்கின்றோம், பல உயிரிழப்புக்களை சந்தித்திருக்கின்றோம்.

சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வகையில் தமிழர்கள் நாங்கள் ஒரு தேசமாக வாழ்வதற்கு எமக்கு பூர்வீகமான நிலம் உண்டு, தனித்துவமான மொழி உண்டு, தனித்துவமான கலாசாரம் உண்டு, மற்றும் கூட்டு பொருளாதாரமும் உண்டு.

அந்தவகையில் நாம் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படுவதற்கான முக்கிய விடயங்களை கொண்டிருக்கின்றோம். தேசமாக அங்கீகரிக்கப்படக்கூடிய ஒரு இனத்திற்கே சுயநிர்ணய உரிமை உண்டு. அந்தவகையில் நாம் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வொன்று அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts