இலங்கை படையினரை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் கொண்டுசெல்வதற்கு நாங்கள் ஓருபோதும் அனுமதிக்க மாட்டோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆங்கில பத்திரிகையொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஜெனீவா அறிக்கை வெளியானதும், பகிரங்கப்படுத்தப்பட்டதும் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை முன்வைப்போம்.
நான் அறிந்தவகையில் குறிப்பிட்ட அறிக்கை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அடுத்த அமர்விலேயே சமர்பிக்கப்படவுள்ளது.
நாங்கள் ரோம் பிரகடனத்தில் கைச்சாத்திடாததால் ,சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க முடியாது.
அதற்கு பதில் நாங்கள் உள்நாட்டு விசாரணை பொறிமுறையை முன்னெடுப்போம் என்பதில் எங்கள் அரசாங்கம் உறுதியாக இருந்துள்ளது.
துரதிஸ்டசமாக இலங்கை 2009 இல் தானேதீர்மானம் ஓன்றை கொண்டுவந்ததுடன் இலங்கையை சர்வதேசவிசாரணைக்கு உட்படுத்தலாம் என ஐக்கியநாடுகள் செயலளார் நாயகத்துடன் இணக்கப்பாட்டிற்கும் வந்தது.
இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரம் சீர்குலைக்கப்பட்டுள்ளது அதில் யாருக்கும் நம்பிக்கையில்லை என்பதே அந்த வேளை சர்வதேச விசாரணைகளிற்கான காரணமாக இருந்தது.
எனினும் இலங்கையில் சுதந்திரமான நீதித்துறையுள்ளது. இலங்கையின் நீதிநடைமுறைக்கு ஏற்றவிதத்தில் செயற்படுவோம். சர்வதேச நடைமுறைக்கு ஏற்றவிதத்தில் செயற்படமாட்டோம் என்பதே எமது நிலைப்பாடு.
நான் மகிந்த ராஜபக்சவை மின்சாரக்கதிரையிலிருந்தும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்தும் காப்பாற்றியுள்ளேன்.
நாங்கள் ரோம் பிரகடனத்தில் கைச்சாத்திடாததால் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.அதற்காக அவர் என்றும் எனக்கு நன்றியுடையவராக இருக்கவேண்டும்.
எவரும் எங்கள் படையினரை சர்வதேச குற்றவியல்நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல அனுமதிக்க முடியாது. ஆனால் எங்கெல்லாம் படைவீரர் ஓருவர் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றாரோ அது எங்கள் படையினரின் கௌரவத்தை பாதிக்கின்றதோ. அவரை எங்கள் பொதுவான சட்டம் மற்றும் இராணுவ சட்டத்தின் கீழ் நாங்கள்தண்டிக்க முடியும்.
ஆகவே சர்வதேச விசாரணையோ அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றமோ எங்களிற்கு அவசியமில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.