தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்மொழியப்பட்டுள்ள விடயங்களானவை இன நல்லுறவுக்கும், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாகும். இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
கொடிய யுத்தத்திலிருந்து மீட்ட நாட்டை மீண்டும் பெரும் அழிவுக்குக் கொண்டுசெல்லும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது.
விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் சமாதானம், நல்லிணக்கத்துக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
அது மட்டுமல்லாது, தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அதிகமான அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவதாகவும், சமஷ்டி அடிப்படையில் வடக்கு – கிழக்கை இணைந்த சுயாட்சியையும் வழியுறுத்தியுள்ளனர்.
அதுதவிர, எவ்வாறான குற்றச்சாட்டுகள் இருந்தாலும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும் மற்றும் 1983ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்ததுபோன்று காணிகள் மீள வழங்கப்படவேண்டும் என பல்வேறு சர்ச்சைக்குரிய கோரிக்கைகள் அதில் உள்ளடங்கியுள்ளன.
விடுதலைப் புலிகள் ஆயுதத்தால் கோரிய விடயங்களை த.தே.கூ. அரசியல் ரீதியாக பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது. இதனால், 2009ஆம் ஆண்டு பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதில் என்ன பயன்? போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச அழுத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இதன் மூலம் எமது இராணுவச் சிப்பாய்களைத் தண்டிக்க முயற்சிக்கின்றது.
நாட்டுக்காகப் போராடிய இராணுவச் சிப்பாய்கள் சிறைக்குச் செல்லவும் நாட்டைப் பிரிக்கப் போராடிய விடுதலைப் புலிகளை விடுதலை செய்யவுமே அவர்கள் முயற்சிக்கின்றனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தங்கள் செய்துகொண்டுள்ளதாக நாங்கள் தெரிவித்தோம். இதற்கமையவே அவர்கள் செயற்பட்டுவருகின்றனர்.
தற்போது வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி நாட்டு மக்களுக்கு பதில் கூறவேண்டும். அது மட்டுமல்லாது, சம்பிக்க ரணவக்க மற்றும் ரத்ன தேரர் ஆகியோர் எதிர்ப்பை வெளியிடாமல் இருப்பது ஏன்?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் முஸ்லிம்களுக்கென தனி அலகு கோருகின்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் சுயாட்சி கோரிக்கை என்று கூறுகின்றது. இவை தேசிய பாதுகாப்புக்கும், நல்லிணக்கத்துக்கும் பாரிய அச்சுறுத்தலாகும் – என்றார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா – தேசிய அரசு நிறுவுவதற்கே ஐ.தே.க. முயற்சிசெய்கின்றது.
இந்த நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாங்கள் வெற்றிபெறுவோமாயின் எம்முடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தப்போவதில்லை என்பதை அனைவரும் அறிவார்கள்.
அவர்கள் பேச்சு நடத்துவது எல்லாம் ஐ.தே.கவுடனேயே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமானது பாரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவர்களது கோரிக்கைகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தமது நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும் – என்றார்.