யாழ்ப்பாணம் தேர்தல் அதிகார பிரதேசத்துக்குள் மட்டும் போட்டியிடுவதற்காக சமர்ப்பித்த தங்களுடைய வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளும்வரை, பொதுத்தேர்தல் நடத்துவதை இடைநிறுத்திவைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடத்தவிருந்த தேர்தலையே இடைநிறுத்துவதற்கான உத்தரவை தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்ட குழுவினருக்கு பிறப்பிக்குமாறு அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
‘எங்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர முன்னணி’ என்ற கட்சியே மேற்கண்ட ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டணங்கள் இன்றி தள்ளுபடி செய்தது.
இந்த மனுவின் பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்புவதனை மறுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம், வேட்பு மனுவை சட்டரீதியிலேயே மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி நிராகரித்துள்ளார் என்றும் சுட்டிக்காட்டியது.
நாடாளுமன்ற தேர்தல் கட்டளைச்சட்டத்தின் 15(3)ஆம் பிரிவின் பிரகாரம் மனுதார் கட்சியானது சட்டத்தின் பிரகாரம் வேட்பு மனுவை பூரணப்படுத்தவில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த ரிட் மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் விஜித்த மலல்கொடவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. மனுவில், தேர்தல்கள் ஆணையாளர், யாழ் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி, சட்டமா அதிபர் உள்ளிட்ட 24 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.