ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் நேற்று (24) காலை இடம்பெற்ற பரிசளிப்பு விழாவின் போது, மாணவர் படையணியில் இருந்த மாணவர் ஒருவரின் துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பப்பட்டிருந்தமை தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மாணவர் படையணியில் முன்வரிசையில் நின்றிருந்த மாணவர் ஒருவரிடம் இருந்த துப்பாக்கியில், தோட்டாக்கள் நிரப்பி இருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அந்த சமயம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவ்விடத்திற்கு வருகை தந்திருக்கவில்லை என்பதுடன் அந்த மாணவருக்கு எவ்வாறு துப்பாக்கி கிடைத்திருக்கும் என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கலந்துகொண்ட இந்த வைபவம் தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கை இதோ!.
கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் வருடாந்த பரிசளிப்பு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (நேற்று) காலை நடைபெற்றது.
பாடசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதுடன் மாணவர் படையணியின் அணிவகுப்பு மரியாதையுடன் ஜனாதிபதி வரவேற்கப்பட்டார்.
2014ம் ஆண்டில் பல பிரிவுகளிலும் சிறந்த திறமைகளை வௌிக்காட்டிய 25 மாணவர்களுக்கு ஜனாதிபதியின் கரங்களால் பரிசில்கள் வழங்கப்பட்டன.
இதில் ஶ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேன மற்றும் பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.