கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்க வேண்டிய மூன்று விடயங்கள் குறித்து சம்பந்தனுக்கு சீ.வீ.கே.கடிதம்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாரிக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மூன்று முக்கியமான விடயங்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என கோரி அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு

01) எமது 65 வருடகால இலக்கும் கோட்பாடுமான வடக்கு-கிழக்கு இணைந்து தாயகத்தில் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமை சாசனத்தினால் தமிழ்த் தேசிய இன மக்களுக்கு வழங்கப்படும் சுயநிர்ணய உரிமையுடன் கூடியதும் அதி உச்ச அதிகாரப் பரவலாக்கலுடன் கூடியதுமான தன்னாட்சியுடன் இணைப்பாட்சிக் கட்டமைப்பை அடைவதற்கான அரசியல் தீர்வை அடைவது.

02) அச்சுறுத்தல் காரணமாக குற்றங்களை நிர்ப்பந்த்தின் பேரில் ஒப்புக்கொண்டு குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் வாடும் அரசியல் கைதிகளையும், நீண்டகாலமாக நீதிமன்ற வழக்குகளைக் காட்டி சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளையும் – எதுவித விசாரணைகளும் இன்றி இயற்கை நீதி மற்றும் மனித உரிமைகளை மீறும் வகையில் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளையும் – விடுதலை செய்யவேண்டும் என தேர்தலின் பின்பு உருவாகும் அரசாங்கத்தை வற்புறுத்தவும் இதற்கான சர்வதேச ஆதரவைக் கோரவும் நடவடிக்கை எடுத்தல்.

03) வடக்குக் கிழக்கில் உள்ள சகல மாவட்டங்களிலும் பொருளாதார வலயங்களை உருவாக்கி வேலைவாய்புக்களை எற்படுத்தல்.

மேற்குறிப்பிட்ட விடயங்களை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். – என்றுள்ளது.

இதன் பிரதி மாவை சேனாதிராசா, சுமந்திரன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Related Posts