இலங்கையின் சகல தரப்பின் இணக்கத்திற்கு அமைய ஒரே நாட்டுக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு மூலமே இனப்பிரச்சினைக்கான தீர்வு மேற்கொள்ளப்படும் என்று நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞானபனத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக ஐ.நா.அமைப்பினால் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை சம்பந்தமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் சகல தரப்புகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு உள்ளூர் சட்டக் கட்டமைப்பின் மூலம் தகுந்த பதில்கள் வழங்கப்படும் என்றும் அந்த விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று வியாழக்கிழமை கொழும்பில் வெளியிடப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமயில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாதுலுவாவே சோபித தேரர், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், பாட்டளி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன மற்றும் மனோகணேசன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டை மீளவும் கட்டி எழுப்புவதற்கான ஐந்தாண்டு வேலைத் திட்டம் ஒன்றும் ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தின்படி, ஊழல் மோசடிகளை ஒழிப்பது, ஜனநாயக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மற்றும் கல்வித் துறையை மேம்படுத்துவது ஆகிய ஐந்து குறிக்கோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.