விலை போகாத பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதுடன், நிலையான அரசாங்கத்தினை அமைப்பதற்கு இந்த தேர்தலில் மக்களின் பங்களிப்பு மிக அவசியமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் அங்கு தெரிவிக்கையில்,
மனசாட்சியின் நடவடிக்கை என்ற தொனிப்பொருளில் வேலைத் திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம். வடக்கு, கிழக்கு, தெற்கு என்று நாட்டினை பிரிக்காது, பொதுவாக நாட்டு மக்களுக்கான வேலைத் திட்டமாக முன்னெடுத்து வருகின்றோம்.
அதன் வழிமுறைகளை எவ்வாறு தீர்த்துக்கொள்வதென தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்துள்ளோம். நாட்டில் மொழி ரீதியான பாகுபாட்டினை நீக்குவதற்காகவும், மொழி ரீதியாக சமத்துவத்தினை ஏற்படுத்துவதற்கும் ஒன்றிணைந்துள்ளோம்.
மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் களத்திற்கு வந்திருப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டுமாயின், பாராளுமன்ற உறுப்பினராக இருந்து, பிரதமராக இருந்து ஜனாதிபதியாகவும் வந்திருக்கின்றார்.
தற்போது பாராளுமன்ற உறுப்பினராக ஆகுவதற்கான நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றார். அவர் இந்த நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு முக்கிய காரணம், அவரது குடும்பத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள ஊழல் மோசடி சம்பந்தமான குற்றச்சாட்டுக்களுக்கான நடவடிக்கைகளை தடுப்பதற்கும், வேறு திசைக்கு கொண்டு செல்வதற்கும் முயல்கின்றார்.
அத்துடன், ஏன் அவர் குருநாகல் மாவட்டத்தினை தேர்ந்தெடுத்துள்ளார் என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.
அதற்கு, தமது குடும்பத்தினைச் சார்ந்தவர்கள் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். மூவரும் விருப்பு வாக்குகளில் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், வேறு யாருக்கும் விருப்பு வாக்குகள் வழங்க முடியாது.
தமது இருப்பு கேள்விக்குறியாகிவிடுமோ என்ற சந்தேகத்தில் தான், குருநாகல் மாவட்டத்தினை நோக்கி நகர்ந்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் மீள் வருகை என்பது, இலங்கையில் வாழும் மக்களின் நன்மை கருதி அல்ல. இந்த நாட்டில் தனது குடும்பம் தனது, தனது குடும்பத்தினைச் சூழ்ந்துள்ள கும்பலின் இருப்புக்காகவே, வருகை தந்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு எந்தவித சாத்தியப்பாடுகளும் இல்லை என நினைக்கின்றோம். இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக்கொண்டால், ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கிக் கொண்டு, ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
மறுபுறத்தில் ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மையினை பெற்று ஆட்சி அமைப்பாராயின், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டு, ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.
இந்த இரண்டு கட்சிகளின் போக்குகள் இவ்வாறாக அமைந்திருக்கின்றன. இதனால் தான் இலங்கையில் வாழும் மக்களிடம் விலை போகாத பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
அத்துடன், விலை போகாத நிலையான அரசாங்கத்தினை உருவாக்கி கொள்வதற்கு, நடைபெறவுள்ள இந்த தேர்தலில் மக்களின் பங்களிப்பு மிக முக்கியமென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
முன்னதாக அனுரகுமார திஸாநாயக்க யாழ் ஆயர் இல்லத்திற்கு விஐயம் செய்து, அங்கு யாழ் மறை மாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையுடன் கலந்துறையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.