அரசிலிருந்து கூண்டோடு வெளியேற தயாராகின்றனர் சு.க. அமைச்சர்கள்! – அனுமதியளிக்குமாறு மைத்திரியிடம் கோரிக்கை!!

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய அரசிலிருந்து கூண்டோடு வெளியேறுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக ஜனாதிபதியிடம் அனுமதிபெறவும் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தைக்கூட்டி அமைச்சுப் பதவிகளை இராஜிநாமா செய்வதற்கு ஒப்புதல் பெற்றுத்தருமாறு அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான யோசனை நேற்று மாலை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது என்று திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

தேசிய அரசிலிருந்து வெளியேறுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தயாராகவே இருக்கின்றனர் என்று அமைச்சர்களான மஹிந்த அமரவீர, ரெஜினோல்ட் குரே ஆகியோர் பகிரங்கமாக அறிவித்தனர். “உறுப்பினர்கள் தனித்தனியாக வெளியேறுவதைவிட மத்திய குழுவின் அனுமதியைப்பெற்று ஒரேயடியாக வெளியேறுவதே பொருத்தமாக இருக்கும். மத்திய செயற்குழுவின் அனுமதிக்கமையவே அமைச்சுப்பதவிகள் பெறப்பட்டன” என்று மஹிந்த அமரவீர கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்­ஷ தோல்வியடைந்ததையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி பீடமேறியது. அதன்பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலரும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்த தேசிய அரசை அமைத்தனர்.

இதில் சில உறுப்பினர்கள் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னரே ஐக்கிய தேசியக் கட்சிமீது அதிருப்திக்கொண்டு தேசிய அரசிலிருந்து வெளியேறினர். இதனால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு சுதந்திரக் கட்சியின் மேலும் சில உறுப்பினர்களை ஜனாதிபதி நியமித்தார்.

அமைச்சுகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து தேசிய அரசில் இருந்து சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் படிப்படியாக வெளியேறி வருகின்றனர். மஹிந்த ஆதரவு அணியின் அழுத்தம் காரணமாகவே இவர்கள் தேசிய அரசிலிருந்து வெளியேறுகின்றனர் எனக் கூறப்பட்டாலும், மைத்திரியின் உரைமீது கொண்ட அதிருப்தியாலேயே தாம் வெளியேறுகிறார்கள் என அவர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதும் தேசிய அரசிலிருந்து வெளியேறுவது குறித்து கருத்துகள் வெளியிடப்பட்டன. “மத்திய செயற்குழுவின் கோரிக்கையின்பிரகாரமே அமைச்சுப் பதவிகளை ஏற்றோம். பதவிகளை இராஜிநாமா செய்வதாக இருந்தால் அதே மத்திய குழுவின் அனுமதியுடன் அனைவரும் ஒரேடியாகச் செய்யவேண்டும். மாறாக, தனித்தனியாக பிரிந்து செல்வது ஏற்புடையதல்ல. எனவே, மத்திய செயற்குழுக் கூட்டத்தைக்கூட்டி அமைச்சுப் பதவிகளைத் துறப்பதற்குரிய ஒப்புதலைப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதியிடம் நாம் கோரிக்கை விடுக்கவுள்ளோம்” என்று மஹிந்த அமரவீர கூறினார்.

இன்று மாலை ( நேற்று மாலை) இந்தக் கோரிக்கை ஜனாதிபதியிடம் விடுக்கப்படும் என்று திலங்க சுமதிபால இதன்போது குறிப்பிட்டார். அத்துடன், அமைச்சுப் பதவியைத் துறப்பதற்குத் தான் தயாராகவே இருக்கிறார் என அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, பெளசி, ரெஜினோல்ட் குரே, மஹிந்த அமரவீர, ராஜித சேனாரட்ன, அர்ஜுன ரணதுங்க, துமிந்த திஸாநாயக்க, எம்.கே.டி.எஸ்.குணவர்தன, ஜனக்க பண்டார தென்னகோன், சாந்தபண்டார உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 25இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தேசிய அரசில் அமைச்சுப் பதவிகளை வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுபவர்களுக்கு சுதந்திரக் கட்சி உறுப்புரிமையை இரத்துசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts