கிடைக்கப்பெற்ற பல வாய்ப்புகளை தவறவிட்டு வரலாற்றுத் துரோகமிழைத்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் – டக்ளஸ் தேவானந்தா

கிடைக்கப்பெற்ற பல வாய்ப்புகளை தவறவிட்டு வரலாற்றுத் துரோகமிழைத்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1

யாழ்ப்பாணம், பாசையூரில் நேற்றய தினம் (21) இடம்பெற்ற மக்கள் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் ஜனநாயக வழிமுறையிலேயே எமது மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமென நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றோம். அதுமட்டுமன்றி, அதற்கான தீர்வுத் திட்டங்களையும், வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்தும் வருகின்றோம் என்பதுடன், எதிர்காலத்திலும் முன்னெடுப்பதற்கும் தயாராக இருக்கின்றோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தீர்வுத் திட்டங்களோ அன்றி, வேலைத்திட்டங்களோ இல்லாத நிலையே காணப்படுகின்றது. இதனடிப்படையில் நோக்கும் போது, எமது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு விருப்பமோ, அக்கறையோ அவர்களிடம் இல்லை என்பது புலனாகின்றது.

இவ்வாறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பட்சத்தில், அவர்கள் சுயலாப அரசியலை முன்னெடுக்க முடியாத நிலையே ஏற்படும் என்பதனால்தான் தமது தேர்தல் வெற்றிகளுக்காக மக்களை உசுப்பேற்றி வாக்குகளை அபகரித்து வருவதை நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர். ஆனால், எவ்விதமான இடர்பாடுகள் வரினும் அவற்றை எதிர்கொள்வது மட்டுமன்றி, வெற்றி கொண்டு மக்களுக்கு வளமான, நிம்மதியான வாழ்வைப் பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது, ஈ.பி.டி.பியின் வேட்பாளர்களான யாழ். மாநகர முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா மற்றும் “சொல்லின் செல்வர்” இரா. செல்வவடிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Posts