Ad Widget

பணிப்பாளரின் அசட்டையீனத்தால் பலிக்கடாக்களாகும் யாழ். கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள்

நிர்வாகச் சீர்கேடுகளால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்ச்சியாக அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரி மாணவர்களால் உள்ளிருப்புப் போராட்டம் ஒன்று இன்றையதினம் (21.07.2015) மேற்கொள்ளப்பட்டது.

இதையறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சுத்தமில்லாமல் காணப்பட்ட சிற்றுண்டிச்சாலையில் உணவுப் பதார்த்தங்களை சோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சிற்றுண்டிச் சாலை உணவுகளில் சுத்தமின்மை, பறவைகளின் கழிவுகளால் துர்நாற்றம், பணிப்பாளரின் அசட்டையீனம், நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு வந்தனர்.

நிர்வாகச் சீர்கேடுகளுக்கும், சுகாதாரச் சீர்கேடுகளுக்கும் பணிப்பாளரின் அசமந்தமே காரணம் எனக் குற்றஞ்சாட்டும் மாணவர்களும், விரிவுரையாளர்களும் தங்களது ஆதங்கத்தை ஊடகவியலாளர்களிடம் கொட்டித் தீர்த்தனர்.

மேலதிக பணிப்பாளர் சாந்தகுமார் கருத்துத் தெரிவிக்கையில்,

நீண்டகாலமாக ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டலையும் வெளிப்படுத்தல்களையும் இந்நிறுவனம் செய்து வருகிறது. 60 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

பிரதான மண்டபமே கடுமையாக சேதமடைந்துள்ளது. மழை பெய்து கொண்டிருக்கும் போது மாணவர்கள் நனைந்து கொண்டே கல்வி கற்கும் அவலநிலை இங்கு காணப்படுகின்றது. இருக்கும் வளங்களை சிறப்பாக பயன்படுத்தாத நிலைமை இங்கே காணப்படுகின்றது. ஆனால், அதிபரோ இவைகளைக் கண்டும் காணாமல் உள்ளார்.

மாணவர்கள் எப்போதும் தங்களுக்கு தண்ணீர் வசதி இல்லை. மலசலகூட வசதி இல்லை என்று சொல்கிறார்கள். சாதாரணமாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலையில் கூட இந்த எல்லா வசதிகளும் நிறைவாக காணப்படுகின்றன. ஆனால், தரம் – 01 (Grade – 01) என்று சொல்லப்படுகின்ற இந்த தொழிநுட்பக் கல்லூரி இவ்வளவு வசதியீனங்கள் இருக்கிறது. எத்தனையோ அதிகாரிகளுக்கு இந்தப் பிரச்சினைகளை சொல்லி இருக்கிறோம். என்றார்.

விரிவுரையாளர் மதியானந்தன் கருத்துத் தெரிவிக்கையில்,

தொழிநுட்பக் கல்லூரியின் பணிப்பாளரின் பழிவாங்கல்கள், இந்நிறுவனத்தைப் பற்றிய எந்தவொரு அக்கறையில்லாத செயற்பாடுகள் காரணமாக சீரழிந்து கொண்டிருக்கிறது.

பறவைகளில் இருந்து ஒரு வித பேன் கீழே விழுந்து கொண்டிருக்கும். எத்தனையோ மாணவர்களின் உடலில் தோல்கள் தடித்துக் காணப்பட்டது. பணிப்பாளர் வருவார் போவார். எந்த அக்கறையும் இல்லை. ஏதாவது பிரச்சினையை சுட்டிக் காட்டினாலும் மிரட்டும் தொனியில் அவரின் செயற்பாடுகள் தொடரும்.

முதலமைச்சர், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் உட்பட பலருக்கு பணிப்பாளர் தேவையில்லாத கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்தும் நாங்கள் பல்வேறு துன்பங்களையும் அனுபவித்து வருகின்றோம். என்றார்.

டிப்ளோமா கற்கை நெறிகள் பகுதித் தலைவர் ஜெனார்த்தனன் கருத்துத் தெரிவிக்கையில்,

தொழிநுட்பக் கல்லூரியின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் எந்தவிதமான மதிப்பீடும் அனுப்பப் படவில்லை.

படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மாணவர்களின் மீது திடீரெனப் புழுக்கள் விழும். அந்தப் புழுக்களையும் கொண்டு போய் மாணவர்கள் காட்டினார்கள். அத்தோடு தமிழில் புகாரையும் எழுத்து மூலம் கொடுத்த போது, அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டு வந்தால் மேலிடத்தில் புகாரளிப்பதாகவும் பணிப்பாளர் கூறினார். பணிப்பாளரின் அசட்டையீனத்தை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். என்றார்.

செய்தியாளர்களிடம் பணிப்பாளர் யோகராஜன் கருத்து தெரிவிக்கையில், இது ஒரு பொய்யான கதை. தனிப்பட்ட குரோதங்களால் சொல்லப்படுகின்றது. எந்தவொரு ஆதாரமும் இல்லை. என்றார்.

பணிப்பாளர் யோகராஜன் அவர்கள் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மழுப்பிய பதில்களையும், பிரச்சினைகளை திசை திருப்பும் நடவடிக்கைகளிலுமே குறியாக இருந்தாரே ஒழிய மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எவ்விதமான அக்கறைகளையும் காட்டவில்லை.

சிற்றுண்டிச் சாலையில் பெரும் சுகாதாரக் குறைபாடு

கல்லூரியின் சிற்றுண்டிச் சாலையில் பெரும் சுகாதாரக் குறைபாடுகள் நிலவுவதாக மாணவர்களினால் சுட்டிக் காட்டப்பட்டது. அது தொடர்பில் மாணவர்களால் 17.07.2012 அன்று அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட முக்கியமான விடயங்கள் வருமாறு, முதல்நாள் உணவுகளைச் சூடுகாட்டி விற்பனை செய்கின்றனர்.

கறிகளில் புழுக்கள் இருக்கின்றன. சகல உணவுப் பொருட்களின் விலைகளும் கூடுதலாக விற்கப்படுகின்றன.

இவை தொடர்பில் மூன்று வருடங்கள் கடந்தும் பணிப்பாளர் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கு தரமான கல்வி மறுக்கப்படும் விடயத்தை ஒரு மனித உரிமை மீறலாகவே பார்க்க வேண்டும். ஒரு சில நாட்கள் அல்ல. பல வருடங்களாக தூசிகளுக்கும், புழுக்களுக்கும், கிருமிகளுக்கும் மத்தியில் இருந்து எவ்வாறு மாணவர்களால் நிம்மதியாக, கவனச் சிதைவின்றி படிக்க முடியும்?

சிற்றுண்டிச்சாலையிலும் சுகாதாரச் சீர்கேடு, குடிதண்ணீரும் இல்லையென்றால் மாணவர்கள் எங்கே போவது? நவீன கல்வி யுகம் என்று சொல்லப்படுகின்ற இந்த நூற்றாண்டிலும் மாணவர்களுக்கு இவ்வளவு கொடுமைகளா?

அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் வால் பிடிக்கும் சிலரால் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாழாவதை இனியும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

பணிப்பாளர் மேல் துறை ரீதியிலான நடவடிக்கைகளை கல்வியமைச்சும், அதிகாரிகளும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கல்வியில் அரசியல் நுழைவதை எந்தச் சூழ்நிலையிலும் அனுமதிக்க முடியாது.

பல்கலைக்கழகங்களுக்கு அடுத்தபடியாக மாணவர்களின் கல்வியறிவு, தொழிலறிவை வளர்ப்பவை தொழிநுட்பக் கல்லூரிகளே. இதனை உரியவர்கள் உணர்ந்து நடக்க வேண்டும்.

ஆர்வமாக கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கும், அக்கறையுடன் கல்வியைப் புகட்ட நினைக்கும் விரிவுரையாளர்களுக்கும் ஒரு அற்புதமான கல்விச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது நிர்வாகத்தின், பணிப்பாளரின் கடமை.

செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

IMG_9126 copy

Related Posts