நீதியானதும் – சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
அரச நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்குச் சொந்தமான சொத்துகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தக்கூடாது என்றும், ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபயகோனுக்கே இந்த ஆலோசனையை ஜனாதிபதி மைத்திரிபால வழங்கியுள்ளார் என ஜனாதிபதி செயலக அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் செயலாளர்கள், அனைத்து மாகாண செயலாளர்கள், அனைத்து மாகாண ஆளுநர்களின் செயலாளர்கள், அனைத்து மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர்கள் ஆகியோருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2015 நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்துக்கமைய நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணையாளருக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதற்கு அனைத்து அரச அதிகாரிகளும் கட்டுப்பட்டுள்ளனர்.
இதற்கமைய தேர்தல் பணிகளுக்குத் தேவையான அதிகாரிகளைத் தேர்தல்கள் ஆணையாளரிடம் தகுந்த முறையில் பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.