மக்கள் என்னுடன் இருக்கும் வரை எவருடைய குற்றச்சாட்டுக்கும் நான் பதில் அளிக்கப் போவதில்லை. மக்கள் அதற்கு பதில் அளிப்பர் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்.
தீர்க்கமான அரசியல் முடிவு ஒன்றை எட்டுவதற்கு நாம் இங்கு கூடியுள்ளோம். நாட்டுக்கு வலுவூட்டும் பயணத்தை ஆரம்பிக்க உள்ளோம். யுத்தம் முடிந்து என்னை வாழ்த்திய கைகளில்தான் கடந்த தேர்தலில் என்னை வீட்டுக்கும் அனுப்பி வைத்தீர்கள். உலகமே அஞ்சிய தீவிரவாதத்தை தோற்கடித்தோம். அப்படியான நான் சட்டமா அதிபர், பிரதம நீதியரசர் அனைவரையும் கொண்டுவந்து இராணுவ சூழ்ச்சி செய்ததாக கேலி செய்தனர். ஆனால் தேர்தல் முடிந்து நான் எடுத்த முடிவை உலகமே பாராட்டியது.
இதுவரை 892 அரச ஊழியர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பிரதமரின் செயலாளரை நெற்றியில் துப்பாக்கி வைத்து விசாரணை செய்தனர். அரச ஊழியர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். அந்த யுகத்தை நாம் முடிவுக்கு கொண்டு வருவோம். சில அரச ஊழியர்கள் அச்சத்தில் பதவி விலகிச் சென்றுள்ளனர். சீன அதிகாரிகளிடம் விசாரணை செய்தனர்.
அன்று பிரபாகரனிடம் மண்டியிட்ட இவர்கள் அதிகாரத்தில் இருக்கவென ஒப்பந்தம் செய்து கொண்டனர். பிரேமதாஸ புலிகளுக்கு ஆயுதம் வழங்கியதை மறக்க முடியாது. ஐதேக காலத்தில் நடந்த ஜேவிபி கலவரம் மற்றும் 600 பொலிஸார் கொல்லப்பட்டது நினைவு இருக்கிறதா? வடக்கில் இராணுவம் தோற்க இடமளித்துள்ளனர்.
நான் துரோகம் செய்துள்ளேனா? நாட்டுக்கு மக்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் செய்யவில்லை. வௌிநாட்டு சக்திகளிடம் மண்டியிடாது இருந்த என்னை விமர்சிக்கின்றனர். ஆனால் உண்மையான துரோகியை கண்ணாடியில் சென்று முகத்தைப் பார்க்கச் சொல்லுங்கள். மெகா டீல் காரர்கள் ஐதேகவில் உள்ளனர். நான் தேசிய சொத்துக்களை விற்க இடமளிக்கவில்லை. இதுவா நாம் செய்த தவறு, திருட்டு? மக்களிடம் இருந்து நாம் ஒருபோதும் பணம் திருடவில்லை. பார் லைசன் வழங்கவில்லை. கெசினோ லைசன் வழங்கவில்லை. அனைவரும் பொய் சொல்கின்றனர்.
நாடு ஹெரோயின் போதைப் பொருளால் நிறைந்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் விற்க இடமளித்துள்ளனர். ஆனால் நாம் ஹெரோயின் பிடித்தோம். இதுபற்றி பேசிய தேரர்கள் எங்கே? அப்படி பேசியவர்கள் தேசிய பட்டியலில் உள்ளதாக நான் கூறவில்லை சுற்றி உள்ளவர்கள் கூறுகின்றனர். பிரபாகரன் என்னை அழிக்க நினைத்தார். ஆனால் இன்று ரணில் என்னை அழிக்க நினைக்கிறார். பிரபாகரனின் திட்டம் ரணிலின் திட்டமாக மாறியுள்ளதா?
வடக்கு கிழக்கிற்கு செல்ல இன்று பலர் அஞ்சுகின்றனர். அந்த அளவு நிலைமை மாறியள்ளது. இனவாதம் பேசியவர்கள் இன்று ஐதேக பக்கம் உள்ளனர். என் பக்கம் எந்தவொரு அடிப்படைவாதிகளும் இல்லை. நாட்டில் ஐக்கியத்தை கட்டியெடுப்ப வேண்டும். என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு மக்களே பதில் அளிக்க வேண்டும்.´ இவ்வாறு மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.