கொழும்பு மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் வி.ஆனந்தசங்கரி தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி களமிறங்கவுள்ளது.
இன்றைய தினம் வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணி யாழ்ப்பாணம் உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போட்டியிடுகின்றது.
அதற்கு மேலதிகமாக கொழும்பு மாவட்டத்திலும் போட்டியிடுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானித்திருந்த போதிலும் இறுதிநேரத்தில் இந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே போட்டியிடும் முடிவிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டதாக அக்கட்சியின் நிர்வாக செயலாளர் இரா. சங்கையா தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், அக்கட்சியின் உப செயலாளர் சண். குகவரதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் சார்பில் ஒருவரும இ.தொ.கா.வின் சார்பில் ஒருவரும் தமிழ் வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளனர்.
இந்த நிலையிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரியும் கொழும்பில் போட்டியிடவுள்ளார்.