இறுதியாக தயாரிக்கப்பட்ட கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பட்டியலில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இன்று வேட்பு மனுதாக்கல் செய்யப்படவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இறுதியாக தெரிவுசெய்யப்பட்டு மட்டக்களப்பு கல்குடா தொகுதியில் தமிழரசுக்கட்சி சார்பாக போட்டியிடவிருந்த சித்தாண்டியைச் சேர்ந்த சி.சாமித்தம்பி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக குணசீலன் சௌந்தரராஜ நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கத்தோலிக்க மதம் சார்பாக ஒருவர் நியமிக்கப்படவேண்டுமென பல்வேறுதரப்பினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய மேற்படி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
அதனடிப்படையில் தமிழரசுக் கட்சி சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு நான்காவது இடத்தை பெற்றுக்கொண்டவருமான குணசீலன் சௌந்தரராஜன்,
ரெலோ சார்பாக மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரன், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பாக மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் ஆகியோரும், புளோட் சார்பாக ச.வியாழேந்திரன் (அமல்) ஆசிரியரும், வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளனர்.
எதிர்வரும் பொதுத் தேர்தல் களத்தில் தமிழரசு கட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் புது முக வேட்பாளராக , பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிறிநேசனும் புளோட் சார்பாக ச.வியாழேந்திரன் (அமல்) ஆசிரியரும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்