இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இதில் முன்னதாக நிறைவடைந்த இரு போட்டிகளிலும் தலா ஒரு வெற்றியைப் பெற்ற நிலையில் சமநிலையில் இருந்த இரு அணிகளும், கடந்த மூன்றாம் திகதி மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் தொடரில் களமிறங்கின.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியை வசப்படுத்திய பாகிஸ்தான், முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
இதன்படி தனது முதலாவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை 278 ஓட்டங்களுடனும் அடுத்ததாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 215 ஓட்டங்களுக்கும் சகல விக்கெட்டுக்களையும் இழந்தன.
பின்னர் 63 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்க இலங்கை தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது.
இலங்கை சார்பாக அதிரடியாக ஆடிய மெத்தியூஸ் 122 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 67 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த நிலையில் 313 ஓட்டங்களை குவித்தது இலங்கை.
இதனால் பாகிஸ்தான் அணிக்கு 377 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணி இன்றைய ஐந்தாவதும் இறுதியுமான நாளில், மூன்று விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து, 380 ஓட்டங்களை விளாசி வெற்றியைத் தனதாக்கியது.
இதன்படி ஏழு விக்கெட்டுக்களால் மூன்றாவது டெஸ்டை பாகிஸ்தான் வசப்படுத்தியதோடு, தொடரையும் கைப்பற்றியது.
அந்த அணி சார்பில் யுனிஸ்கான் ஆட்டமிழக்காது 171 ஓட்டங்களை குவித்ததோடு, ஷான் மசூத் 125 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
ஆட்டநாயகன் விருதினை யுனிஸ்கானும் தொடர்ரின் நாயகநாக யசீர்ஸாவும் பெற்றுக்கொண்டனர்.