தன்னை தவறாக புரிந்துகொண்டிருந்ததாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்திருந்தார் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை, முல்லைத்தீவிலுள்ள பாரதி இல்லத்துக்கு அமைச்சர் சுவாமிநாதன் சென்றிருந்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஒரு முகாமாகவே இந்த பாரதி இல்லத்தினை கே.பி. நடத்தி வருகிறார். அவ்வில்லத்துக்கு திடீரென விஜயம் செய்த சுவாமிநாதன், கே.பி.யை அடையாளம் கண்டுகொள்ளாமல் யார் நீங்கள் என வினவியுள்ளார். அப்பொழுது தான்தான் குமரன் பத்மநாதன் என அறிமுகப்படுத்தியிருக்கிறார் கே.பி.
உடனே ஆச்சரியப்பட்ட சுவாமிநாதன், “உங்களைப் பற்றி தவறாக புரிந்து வைத்திருந்திருக்கிறேன். இவ்வளவு எளிமையாக இவ்வளவு பெரிய காரியத்தை செய்கின்றமை மகிழ்ச்சியளிக்கிறது” என்று கே.பி.யிடம் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கே.பி. மேலும் தெரிவிக்கையில்,
“என்னை சுவாமிநாதனினால் அடையாளம் காணமுடியவில்லை. நான் யார் என்று அறிமுகப்படுத்தியதும் அசந்துபோய்விட்டார். இவ்வளவு பிள்ளைகளை பராமரிக்கின்றீர்களா? என ஆச்சரியப்பட்டார். அதுமட்டுமல்லாமல் பாரதி இல்லத்தின் பிள்ளைகளுடனும் அன்பாக பழகியதோடு, அவர்களுக்கு நல்லாசியுரையினையும் சுவாமிநாதன் அவர்கள் வழங்கினார்” என்று குறிப்பிட்டார்.
பாரதி இல்லத்துக்கான விஜயம் தொடர்பில் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவிக்கையில்,
“இது ஒரு சாதாரண விஜயம். இதனை அரசியல் நோக்கோடு பார்க்க வேண்டாம். அங்குள்ள சிலர் குறிப்பிட்டதுக்கிணங்க பாரதி இல்லத்துக்கு விஜயம் செய்தேன். அங்கு முதல் முதலாக கே.பி.யை சந்தித்தேன். இச்சந்திப்பில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை” என்று தெரிவித்தார்.