தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்யும் நோக்கத்தோடு தான் அரசியலுக்கு வந்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக செயற்படுவதற்காக அல்ல என வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் புதன்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், நான் அரசியலுக்கு வந்ததன் நோக்கம் தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை பெற்றுக்கொடுப்பதற்காக ஆகும். பணம் சம்பாதிப்பதற்காகவோ அதிகாரங்கள் மீது மோகம் கொண்டோ அரசியலுக்கு வரவில்லை. எனக்கு வேறு தொழில் இருக்கின்றது. மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலுக்கு வந்தேன்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளேன்.
நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவன் அல்ல. அவர்களின் பயணத்துக்கு தடையாக இருப்பவனும் இல்லை. நானும் ஒரு தமிழனாக இருப்பதனால் தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடக்கப்பெற வேண்டும் என்பதில் விருப்பம் கொண்டவன்.
தொண்டர் ஆசிரியர்கள் நியமனம், மக்களின் மீள்குடியேற்றம் என்பன தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி இருந்தேன். குறிப்பாக மயிலிட்டி பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என அவற்றுக்கு மிகவிரைவில் தீர்வு கிடக்கும் என நம்புகிறேன் என அங்கஜன் மேலும் கூறினார்.