கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட அதிர்வு, நிலநடுக்கமா என்பது தொடர்பில் கண்டறிவதற்கான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
பம்பலப்பிட்டி பகுதியில் நேற்று (01) மாலை நான்கு மணியளவில் மூன்று தடவைகள் அதிர்வுகள் ஏற்பட்டதை தாம் உணர்ந்ததாக அந்தப் பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.
அதிர்வுகள் உணரப்பட்டதை அடுத்து பாதுகாப்பான இடத்திற்கு தாம் சென்றதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
பம்பலப்பிட்டி பகுதியில் சிறு அளவில் ஏற்பட்டுள்ள அதிர்வினால் எவ்வித பாதிப்புக்களும்
ஏற்படவில்லை எனவும் இந்த விடயம் குறித்து பல வீடுகளிலிருந்து தகவல் கிடைத்துள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி சுட்டிக்காட்டியுள்ளார்.