வடக்கு, கிழக்குக்கு வெளியே போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கப்படும்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு தவிர்ந்து ஏனைய இடங்களில் போட்டியிடுவது தொடர்பில் மனோ கணேசனின் முற்போக்கு கூட்டணியுடன் கலந்துரையாடி இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட பின்னர் அது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா புதன்கிழமை (01) தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் அவரிடம் வினாவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘வடக்கு, கிழக்கு தவிர்ந்த என்னும் போது கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் போட்டியிடுவது குறித்து ஆராயப்படவேண்டும். போட்டியிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் நாங்கள் ஆராய்வோம்’ என்றார்.

‘இது தொடர்பில் கூட்டமைப்பின் கட்சிகளின் சந்திப்பு மற்றும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்திலும் ஆராய்ந்துள்ளோம். தொடர்ந்தும் இது பற்றி கலந்துரையாடுவோம். கொழும்பில் ஒருவர் வெற்றிபெறுவதற்காக சந்தர்ப்பங்கள் அதிகமுண்டு.

எதிர்வரும் தேர்தலில் எந்தந்த இடங்களில் போட்டியிடுவது, கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிக்களின் எத்தனை வேட்பாளர்களை நிறுத்துவது என்பது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம். விரைவில் அது தொடர்பில் ஒரு முடிவுக்கு வருவோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்தும் ஆராயவுள்ளோம். இலங்கைக்குள் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தங்களை தங்களே ஆளக்கூடிய சுயாட்சியை நிலைநாட்ட மத்திய அரசு தலையிடாத முழுமையான அதிகாரங்கள் பெறுவது குறித்து தேர்தல் அறிக்கை காணப்படும்.

தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினை, நிலம், காணாமற்போனோர், சிறையிலுள்ள அரசியல் கைதிகள், பெண்களின் பாதுகாப்பு, மக்களின் வாழ்வாதாரம், விதவைகளின் வாழ்வாதாரம், சிறார்களின் பாதுகாப்பு ஆகிய விடயங்களை மத்திய அரசுடன் கதைத்து உறுதிப்படுத்தல் தொடர்பில் எமது அறிக்கை அமையும்’ என்று அவர் கூறினார்.

‘குறிப்பிட்ட கால எல்லைக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்வு காணக்கூடியதற்கு இசைவாக அந்த அறிக்கை இருக்கும். இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் ஏற்கெனவே நாங்கள் திட்டமிட்ட அரசியல் நடவடிக்கைகளை செய்திருக்கின்றோம். புலம்பெயர் தமிழர்களின் உதவிகளுடன் இனப்பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

தற்போது நிலவிய ஆட்சி தொடர்ந்து நிலவினால் அந்த அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவோம். வடக்கு கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு அற்ற நிலை உருவாக்கப்பட வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு. இனப்பிரச்சினை தொடர்பில் இந்திய அரசுடன் தொடர்ந்து பேசி வருகின்றோம். இனிவருங்காலங்களிலும் தொடர்ந்தும் பேசுவோம்’ என்றார்.

Related Posts