Ad Widget

கிளிநொச்சியில் காணாமற்போன குழந்தையை தேடி களுத்துறையில் வேட்டை!

கிளிநொச்சி, உருத்திரபுரம் எள்ளுக்காடு பிரதேசத்தில் காணாமல் போன மூன்று வயது குழந்தை உதயகுமார் யர்சிகா பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கும் நிலையில் அவரைத் தேடும் வேட்டை நேற்று தென்பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டது.

missing-girl-vanni

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று காலை முதல் களுத்துறைப் பகுதியில் குழந்தையைத் தேடி பூரண தேடுதல் நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டதாகவும், எனினும் நேற்று மாலை வரை குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குழந்தையின் தாயார் கிளிநொச்சி பொலிஸாருக்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கியுள்ள வாக்குமூலங்களின் பரஸ்பர வேறுபாடுகளையும் இன்னும் சில தடயங்களையும் வைத்து இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ள பொலிஸார், குழந்தை விற்பனை செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் யாழ். பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந் நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் கிளிநொச்சி பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன் மாயமாகியுள்ள குழந்தை வெளி நாடொன்றுக்கு கடத்தப்படுவதை தடுக்க அவரது புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை கட்டுநாயக்க, மத்தள விமான நிலைய அதிகாரிகளுக்கு பொலிஸாரால் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

எவ்வாறாயினும் காணாமல் போயுள்ள குழந்தையின் தாயார் உள்ளிட்ட உறவினர்கள் பொலிஸாருக்கு வழங்கியுள்ள முன்னுக்கு பின் முரணான வாக்குமூலங்களால் விசாரணைகளை எந்த கோணத்தில் முன்னெடுப்பது என்பதில் தெளிவற்ற நிலைமை நிலவுவதாகவும் எனினும் பல்வேறு கோணங்களில் பல பொலிஸ் குழுக்களைக் கொண்டு குழந்தையை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Related Posts