கிளிநொச்சி பகுதியில் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள புகையிரத பாதையை குறுக்கறுத்துச் செல்லும் வீதிகளுக்கு பாதுகாப்புக் கடவை அமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமுறிகண்டி முதல் ஆனையிறவு வரைக்குமான பகுதிகளில் ஏ-9 வீதியில் இருந்து புகையிரத வீதியை குறுக்கறுத்துச் செல்லும் குறிப்பிட்ட சில பாதைகள் தவிர சுமார் 23 பாதைகள் புகையிரத பாதுகாப்பு கடவைகள் இன்றி மிக ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன.
குறிப்பாக கிளிநொச்சி திருமுறிகண்டி அக்கராயன் பிரதான வீதியில் அமைந்துள்ள புகையிரதக்கடவையானது பாதுகாப்பற்ற கடவையாகவே காணப்படுகின்றது. குறித்த கடவையில் சமிக்ஞை ஒலி மாத்திரம் உள்ளதே தவிர கடவையில்லாதுள்ளது. புகையிரதம் செல்லும் போது இதனூடாக பாதசாரிகள் பாதுகாப்பற்ற முறையில் கடக்கின்றனர்.
இதேபோன்று பொன்னகர், மலையாளபுரம், பாரதிபுரம் ஆகிய பகுதிகளிலும் சிவபாதகலையகம், புனிதபெண்கள் திரேசா கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இருந்தும் பாதுகாப்பற்ற முறையில் மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் புகையிரத கடவையை கடக்கின்றனர்.
இவ்வாறு புகையிரத வீதியை கடக்க வேண்டிய இடங்களில் கவனயீனமான முறையிலும் ஆபத்தான முறையிலும் வீதியை கடக்க முற்பட்ட சமயம் 10 மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதுடன் 7 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதுடன் பலர் உயிர் தப்பியுள்ளனர் என மக்கள் கூறினர்.