கிளிநொச்சியிலிருந்து கடந்த 21ஆம் திகதி காணாமல் போன 3வயது சிறுமி தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என கிளிநொச்சி பொலிஸார் நேற்று (24) நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
அத்துடன், சிறுமி காணமல் போன விவகாரம் தொடர்பில் கண்டறிவதற்காக நீதிமன்ற அனுமதிகள் சில பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
உருத்திரபுரம், எள்ளுக்காடு, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் யர்சிகா என்ற 3 வயது சிறுமி தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் பெறப்படவில்லை.
சிறுமி காணாமற்போன விடயம் தொடர்பில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட 3 பேரின் தொலைபேசி அழைப்புக்களை பரிசோதனை செய்வதற்கும், இது தொடர்பில் விரிவான மேலதிக விசாரணை மேற்கொள்ளவும், சிறுமியின் புகைப்படத்தை பிரசுரிக்கவும் அனுமதி கோரி கிளிநொச்சி நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை (24) கிளிநொச்சி பொலிஸாரால் வழக்கத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதவான் எம்.ஐ.வகாப்தீன் இவற்றுக்கான அனுமதியை வழங்கினார்.
மேற்படி கிராமத்திலுள்ளவர்கள் 2 கிலோமீற்றர் தூரத்திலுள்ள வாய்க்கால் ஒன்றில் குளிப்பதற்காக தினமும் சென்று வருபவர்கள். இந்த சிறுமியுடன் தாயாரும் வேறு சிலரும் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை வாய்க்காலில் குளிப்பதற்காக வீட்டிலிருந்து நடந்து சென்றுகொண்டிருந்தனர்.
சிறுமி நடக்க சிரமப்பட்டதையடுத்து அவ்வழியாக துவிச்சக்கரவண்டியில் சென்ற 14 வயதுச் சிறுவனிடம் சிறுமியை வாய்க்கால் வரையும் கொண்டு சென்று விடுமாறு தாய் அனுப்பியுள்ளார்.
தாயார் வாய்க்காலடிக்கு வந்தபோது, சிறுமியைக் காணவில்லை. துவிச்சக்கரவண்டியில் கூட்டிச் சென்ற சிறுவனிடம் விசாரணை செய்த போது, தான் சிறுமியை வாய்க்காலடியில் விட்டதாக கூறியுள்ளான். இதனையடுத்து, சிறுமியின் தாயார் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார், அந்தச் சிறுவன் மற்றும் சிறுமியின் உறவினர்கள் என 5 பேரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். எனினும் சிறுமி தொடர்பான எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து, கடற்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை 4 ஆவது நாளாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.