கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தால் விடுவிக்கப்படாத மக்களின் காணிகளை விடுவித்து, மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பாக, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவொன்று கொழும்பில் புதன்கிழமை (24) பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், இரா.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மீள்குடியேற்ற அமைச்சருடன் நடைபெற்ற இந்த சந்திப்பில் வட மாகாணத்துக்கான பிரதமரின் இணைப்பாளர் மாலியத்த முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பிரட்மன் வீரக்கோன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தாலும் கடற்படையாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மீள்குடியேற்றம் செய்யவேண்டிய பரவிப்பாஞ்சான், மருதநகர், முகமாலை, இரணைதீவு கிராமங்களை இராணுவத்திடமிருந்து விடுவித்து காணி உரிமையாளர்களை மீள்குடியேற்றம் செய்வது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
முகமாலை போன்ற பகுதிகளில் காணப்படுகின்ற கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தொடர்பாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் உள்ளிட்ட குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் உழவனூர், தம்பிராசபுரம், நாதன்திட்டம், புன்னைநீராவி போன்ற காணி அனுமதிப்பத்திரம் இல்லாத மத்திய வகுப்பு திட்ட காணி உரிமையாளர்களுக்கு தற்காலிக காணி அனுமதிப்பத்திரத்தை வழங்கி அவர்களுக்கு வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொடுப்பதற்கு வழிவகை எட்டப்படுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்படி விடயங்கள் தொடர்பாக விசேட கூட்டமொன்று, மீள்குடியேற்ற அமைச்சர் தலைமையில் எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி 1 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட் செயலக்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வலிகாமம், மன்னார் குஞ்சுக்குளம், திருக்கோணமலையின் சம்பூர், முல்லைத்தீவின் கோப்பாப்பிளவு ஆகிய கிராமங்களின் மீள்குடியேற்றத் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட்டு கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.