சமுர்த்தி அலுவலரின் தன்னிச்சையான முடிவு காரணமாக சமுர்த்தி கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாகக்கூறி மாற்றுத்திறனாளியான பெண்ணொருவர் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனுக்கு வியாழக்கிழமை (17) மனுவொன்றை கையளித்துள்ளார்.
மனுவின் பிரதிகளை முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் மற்றும் துணுக்காய் பிரதேச செயலாளர் ஆகியோரிடம் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்துள்ளார். முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பழைய முறிகண்டி கிராமத்தினைச் சேர்ந்த இந்தப் பெண்ணே இவ்வாறு மனு கையளித்துள்ளார்.
தன்னுடைய குடும்பத்தில் கணவருடன் சேர்த்து ஐந்து பேரெனவும் முள்ளிவாய்க்காலில் போர் காலத்தில் படுகாயமடைந்த நிலையில் தான் மாற்றுத்திறனாளியாக உள்ளதாகவும் மாற்றுத் திறனாளிகளுக்கு கிடைக்கின்ற சிறிய உதவியை காரணமாகக்கூறி, சமுர்த்தி அலுவலர் சமுர்த்தி கொடுப்பனவை நிறுத்தியுள்ளதாக அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
தமது கிராமத்தில் பொது மண்டபம் உள்ள நிலையிலும் தனியார் வீடொன்றிலேயே சமுர்த்தி அலுவலகத்தை நடத்தி வருவதாகவும், உதவி வழங்குகின்ற போது சமுர்த்திக் குழுவின் ஆலோசனைகளை கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து வசதியானவர்களுக்கும் தனிநபர்களுக்கும் உதவிகளை பெற்றுக்கொடுத்து உள்ளதாகவும், மாற்றுத்திறனாளியான தனக்கு உதவி நிறுத்தப்பட்டுள்ளது தொடர்பாக குறித்த சமுர்த்தி அலுவலரிடம் கேட்டபோது ‘மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி கிடைக்கின்றது தானே! அதன் காரணமாகத்தான் சமுர்த்தி கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாகவும்’ தெரிவித்ததாக அப்பெண் கூறினார்.
எமது கிராமத்தில் வசதியானவர்களுக்கு சமுர்த்தி வழங்கப்படுவது தொடர்பாக மேலதிகாரிகளிடம் தெரிவிக்கப்போவதாக தான் கூறிய போது தன்னைப்பற்றி பிரதேச செயலரிடமோ மாவட்டச் செயலரிடமோ தெரிவித்துப் பயனில்லையெனவும் சமுர்த்தி அலுவலர் தெரிவித்ததாக மாவட்டச் செயலரிடம் கையளிக்கப்பட்ட மனுவில் தான் குறிப்பிட்டுள்ளதாகவும், தன்னுடைய குடும்ப நிலைமையினை கருத்தில்கொண்டு சமுர்த்தி கொடுப்பனவை மீளவழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அந்த மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.