தமிழகத்தில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர் ஒருவர் தப்பி ஓடியுள்ளார்.
இது குறித்து தமிழக ஊடகமம் வௌியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,
இராமநாதபுரம், மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கி இருந்தவர் சுரேஷ் என்ற நிஷாந்தன் (28). கடந்த 3 மாதத்துக்கு முன்பு புதுக்கோட்டையில் கஞ்சா கடத்திய வழக்கில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 10–ம் திகதி வழக்கு விசாரணைக்காக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சுரேஷ் மற்றும் வேறொரு வழக்கில் தொடர்புடைய 4 பேரை பொலிஸார் அழைத்து சென்றனர்.
அப்போது, குற்றவாளிகள் ஐவரையும் மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை புழல் சிறையில் அடைப்பதற்காக சென்னைக்கு பஸ்சில் அழைத்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு 09.00 மணியளவில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இறங்கிய போது சிறுநீர் கழிக்க வேண்டும் என்று பொலிசாரிடம் சுரேஷ் தெரிவித்தார். அவரை 1–வது நடைமேடையில் உள்ள கழிவறைக்கு செல்ல அனுமதித்து விட்டு மற்ற 4 கைதிகளுடன் பொலிஸ்காரர்கள் இருவரும் வெளியே காத்திருந்தனர்.
சிறிது நேரத்தில் திரும்பி வந்த சுரேஷ், திடீரென பொலிஸ்காரர்களைத் தாக்கி விட்டு தப்பி ஓடினார்.
அதிர்ச்சி அடைந்த பொலிஸார் அவரை பிடிக்க விரட்டினார். இதில் தடுமாறி விழுந்ததில் பொலிஸ்காரர் ஒருவரது கால் முறிந்தது. இதற்குள் கைதி சுரேஷ் தப்பி ஓடிவிட்டார்.
இச்சம்பவத்தால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கைதி தப்பி ஓடியது குறித்து அதிகாரிகளுக்கு பொலிசார் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் மற்ற 4 கைதிகளையும் பத்திரமாக புழல் சிறைக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர். சுரேஷ் நீதிமன்றத்தில் ஆஜரான போது வக்கீல் மூலம் பிணை பெற முயன்று உள்ளார். ஆனால் அவருக்கு பிணை கிடைக்கவில்லை. அவரை பிடிக்க பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.