வடக்கில் ஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் இருக்கின்றார்கள் என்று கூறப்படுவதை தான் மறுப்பதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக்கே முதலிடம் வழங்கப்படும். வடக்கில் இருக்கின்ற இராணுவத்தின் எண்ணிக்கை எவ்வளவு என்பது தொர்பில் தன்னால் எதுவும் தெரிவிக்கமுடியாது என்றும் அவர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர், தொடர்ந்து பதிலளிக்கையில்,
வடக்கில் அவ்வப்போது புதிய புதிய ஆயுதங்கள் மீட்கப்படுவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை. கிளிநொச்சி கொக்காவிலில் அண்மையில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் புதியவை அல்ல. பழைய துப்பாக்கி ரவைகளும் குண்டுகளுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக மீட்கப்பட்டன. இதனை கிளிநொச்சி இராணுவ படைத்தலைமையகமும் உறுதிப்படுதியுள்ளது என்றார்.
இராணுவத்தின் எண்ணிக்கையை ஊடகங்களுக்கு தெரிவிக்கமுடியாது. இரகசியத்தை பாதுகாப்பது தேவையாகும் என்றார்.
வடக்கில் ஆறு கட்டங்களாக சுமார் 10ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. 19ஆயிரம் ஏக்கரை இராணுவம் சிவில் சமூகத்துக்கு கொடுத்துள்ளது. 152 முகாம்களில் தற்போது 93 முகாம்களே இருக்கின்றன. இவையாவும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.