கடந்த வருடம் உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் தேசிய நன்னடத்தை திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட சிறுவர் கழகங்களுக்கிடையில் தேசிய மட்டத்தில் தமிழ் மொழி மூலமாக நடாத்தப்பட்ட போட்டியில் யாழ் மாவட்டத்தின் சிறுவர் கழகம் முதல் இடத்தை பெற்றுள்ளது.
இலக்கம் 176, பனிப்புலம், திருநாவுக்கரசு சிறுவர் கழகம் எனும் யாழ் சங்கானை பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட சிறுவர் கழகமே தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.
இதனடிப்படையில் கடந்த 06 ஆம் திகதி கொழும்பு பஞ்சிகாவத்தை ரவர் மண்டபத்தில் இதற்கான விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது இவ்விருது வழங்கும் நிகழ்வில் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் றோஸி சேனாநாயக்க மற்றும் நன்னடத்தை திணைக்கள தேசிய ஆணையாளர் யமுனா பெரேரா ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு இதற்கான விருதுகளை சிறுவர் கழகங்களிற்கு வழங்கி வைத்தனர்.
மேலும் தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்ற யாழ் மாவட்ட சிறுவர் கழகத்திற்கு 25,000 ரூபா பெறுமதியான காசோலையும் வழங்கப்பட்டது. மேலும் தேசிய ரீதியில் சிறந்த துணை நடிகருக்கான விருது, சிறந்த மேடை அமைப்பு, சிறந்த ஒப்பனை, சிறந்த ஆக்கம், போன்ற நான்கு விருதுகளையும் யாழ் மாவட்டம் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.