முல்லைத்தீவு, கொக்கிளாயில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் விகாரை அமைக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை (05) அடையாள உண்ணாவிரம் இருந்த விகாரை அமைக்கப்படும் காணி உரிமையாளர்கள் மூவரையும் விசாரணை செய்த பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்ததாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் காணிகளில் விகாரை அமைக்கப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி ஆகிய கிராம மக்கள் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் செய்வதுடன், காணி உரிமையாளர்களான யோகராசா யூட்நிமலன், திருஞானசம்பந்தர் மணிவண்ணதாஸ், எஸ்.சிவலோகேஸ்வரன் ஆகியோர் அடையாள உண்ணாவிரதத்திலும் ஈடுபடவும் தீர்மானித்திருந்தனர்.
அடையாள உண்ணாவிரதம் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டமையடுத்து, விகாரைக்கு முன்பாக முன்னெடுக்கப்படவிருந்து கண்டனப் போராட்டமும் கைவிடப்பட்டு, அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதத்துக்கு அனுமதி பெறாமல் செய்தமைக்காக மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.