இனி காமெடி வேடங்களில் நடிக்கத் தயார்: கதவை திறந்துவிட்ட வடிவேலு

வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள ‘எலி’ படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் வடிவேலு, இயக்குனர் யுவராஜ் தயாளன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இதில் நடிகர் வடிவேலு பேசும்போது,

vadivelu-satha

இந்த படம் கண்டிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். முழுக்க முழுக்க நகைச்சுவையாக படத்தை எடுத்திருக்கிறோம். கொத்துக்கொத்தாக வந்து இந்த படத்தை பார்த்து குலுங்க குலுங்க சிரிப்பார்கள். இந்த படத்தில் சதா எனக்கு ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

அவருடன் எனக்கு பாடல் காட்சிகளும் உண்டு. 1960-70 காலக்கட்டம் என்பது ஆங்கிலத்தை நாம் கற்றுக்கொள்ள தொடங்கிய காலம். ஆகவே, இந்த படத்தில் ஆங்கிலத்தை தவறாக உச்சரிக்கும் வசனங்கள் அதிகம் இடம்பெற்றிருக்கும்.

எனது முந்தைய படத்திற்கும் இந்த படத்திற்கும் பெரிய இடைவெளி ஏற்பட்டதற்கு எதுவும் காரணம் இல்ல. ஒரு நல்ல தரமான படத்தை கொடுப்பதற்காகத்தான் இவ்வளவு காலம் எடுத்துக் கொள்ள வேண்டியதாகிவிட்டது.

இடைப்பட்ட காலத்தில் சிறு சிறு காமெடி வேடத்தில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்தது. இருப்பினும், இந்த படத்தை முடித்துக் கொடுத்துவிட்ட பின்தான் அடுத்த படத்தில் நடிக்கவேண்டும் என்று விடாபிடியாக இருந்ததால் இவ்வளவு இடைவெளி ஏற்பட்டு விட்டது.

தற்போது படம் எனக்கு திருப்தியை கொடுத்துள்ளது. அதனால் இனிமேல் காமெடி வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்றார்.

அரசியலில் மீண்டும் குதிப்பீர்களா? என்ற கேள்விக்கு அவர் பதில் கூறும்போது, அதுபற்றி இப்பொழுது எதுவும் கூறமுடியாது. இப்போதைக்கு சினிமா ஷட்டரை திறந்து விட்டிருக்கிறேன். இது நன்றாக செல்கிறது. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று கூறினார்.

Related Posts