யாழ்.பல்கலைக்கழகத்தில் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து மே 18 திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை பிரமாண்டமான முறையில் அனுஸ்ரிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் ஆர்.இராசகுமாரன் தெரிவித்தார்.
தமிழீழ வரலாற்றில் மறக்க முடியாத முள்ளிவாய்க்கால் படுகொலையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்கள், போராளிகளை அன்நாளில் ஒவ்வொரு தமிழ் மகனும், உணர்வுபூர்வமாக அனுஸ்ரிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதுவரை காலமும் 2009 ஆம் ஆண்டு இறுதிப் போரிலே கொல்லப்பட்டவர்களை நினைவு கூருவதற்கு மிகப் பெரும் தடைகள் இருந்தது. பத்திரிகை செய்திகளின்படி அவ்வாறான தடைகள் இல்லாது இருப்பது போலத் தெரிகிறது. எது எவ்வாறான இருந்தாலும் முள்ளிவாய்க்காலிலே படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை, தாய், தந்தையவர்கள் நினைவு கூறுவது என்பது எங்களுக்கு இருக்கின்ற உரிமை. இந்த உரிமைகளை யாரும் மறுக்க முடியாது. யார் தடுத்தாலும் எமது உறவுகளை நினைவு கூர்ந்துதான் ஆக வேண்டும்.
யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஏற்கனவே முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை யாழ்.பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை பாரிய அளவில் அனுஸ்ரிப்பது என்று தீர்மானம் எடுத்துள்ளது. இதில் மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்விசார ஊழியர்களையும் இணைத்து இவ் நினைவு கூறலை செய்வதற்கு எத்தணித்துள்ளோம். இந்த நினைவு கூறலானது ஈழத்தில் சகல பகுதிகளிலும் அனுஸ்ரிக்கப்பட வேண்டும் என்பது பல்கலைக்ழக சமூகத்தின் விருப்பமாக உள்ளது.
இறுதிப் போரில் எமக்காக போராடிய போராளிகள், அப்பாவி குழந்தைகள், பெண்கள், நோயாளிகள், வயோதிபர்கள், சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் என்று சகல தரப்பினரும் கொடூரமாக முறையில் கொல்லப்பட்டனர். இது வரலாற்றிலே காணமுடியாத மிகப் பெரும் துயரமான நிகழ்வாக முள்ளிவாக்கால் படுகொலையே உள்ளது. எனவே இந்த படுகொலை நாளை நினைவு கூறுவது என்பது ஒவ்வொரு தமிழ் மகனதும் கடமையாகும்.
இந்த நினைவு கூறலை இதுவரை காலமும் பல்கலைக்கழகத்தில் அனுஸ்ரித்துள்ளோம். அதே போன்று வேறு பல இடங்களிலும் அனுஸ்ரிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு கூறலை எந்த ஒரு அரசியல் நோக்கம் கொண்டதாக நாங்கள் பார்க்கக் கூடாது. இதுவரை காலமும் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து பிராத்தனை செய்யவேண்டியவர்களாக நாங்கள் உள்ளோம். இந்த நாட்டில் இத்தினம் நினைவு கூறும் தினமாக இருக்க வேண்டும். ஒரு புறம் வெற்றி நாளாகவும் மறுபுறம் நினைவு கூறும் நாளாகவும் இருக்கக் கூடாது. எனவேதான் இம்முறை யாழ்.பல்கலைக்கழகத்தில் பெருமளவில் நினைவுகூறலை நடத்த தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.