பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான உமா குமரன், ஹரோ ஈஸ்ட் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
சற்று முன்னர் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவி்ன் படி, ஹரோ ஈஸ்ட் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளர் பொப் பிளக்மன் 24,668 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவர் மீண்டும் இந்த தொகுதியில் இருந்து தெரிவாகியுள்ளார்.
இரண்டாவது இடத்தைப் பிடித்த, உமா குமரனுக்கு 19,911 வாக்குகள் கிடைத்துள்ளன.
அதேவேளை, இதுவரை வெளியாகியுள்ள 612 முடிவுகளில்,222 இடங்களை தொழிற்கட்சியும், 303 இடங்களை கொன்சர்வேட்டிவ் கட்சியும் கைப்பற்றியுள்ளன.
அதேவேளை, ஹம்ப்செயர் வட கிழக்குத் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட, மற்றொரு இலங்கையரான, ரணில் ஜெயவர்த்தன, சுமார் 30 ஆயிரம் வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 35,573 வாக்குகள் கிடைத்துள்ளன.
இதனிடையே, ரூசிலிப், நேர்த் வூட், மற்றும் பின்னர் தொகுதியில், தேசிய லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட சொக்கலிங்கம் யோகலிங்கம் படுதொல்வியடைந்தார்.
இந்த தொகுதியை 30, 520 வாக்குகளுடன் கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் கைப்பற்றிய நிலையில், 166 வாக்குகளை மட்டும் பெற்று சொக்கலிங்கம் யோகலிங்கம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளார்.