இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பாராட்டைப் பெற்ற வவுனியா இறம்பைக்குளம் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த பிரயாகினி கணேஷலிங்கம் என்ற மாணவி, இந்திய குடியரசு தின நிகழ்வில் விசேட பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.யாழ் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் அப்துல் கலாமிடம் கேள்வி கேட்டதுடன், அவர் அளித்த பதிலை அப்படியே மீண்டும் உடனேயே ஒப்புவித்து அவரது பாராட்டைப் பெற்றார் இந்த மாணவி.இந்தளவு திறமையுள்ள மாணவியை தான் எங்கும் பார்த்ததில்லை என்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்திய முன்னாள் ஜனாதிபதியும், அணு விஞ்ஞானியுமான கலாநிதி அப்துல் கலாம் வியந்து பாராட்டினார்.
யாழ் ரில்கோ உல்லாச விடுதியில் இன்று வியாழக்கிழமை (26-01-2012) நடைபெற்ற இந்தியாவின் 62வது குடியரசு தினத்தையொட்டிய நிகழ்வில் இந்த மாணவி பாராட்டப்பட்டு, பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
இவர் தொடர்பான செய்திகள் முன்னரே ஊடகங்களில் வெளியாகியிருந்தபோதிலும், இவர் கல்வி கற்கும் கல்லூரி தொடர்பான விபரங்கள் எதுவும் வெளியாகியிருக்கிவில்லை.
இந்திய குடியரசு தின நிகழ்வில் கலந்துகொண்டிருந்த இந்த மாணவி தான் வவுனியா இறம்பைக்குளம் மகாவித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரம் வர்த்தகப் பிரிவில் கற்றுக்கொண்டிருப்பதாகக் கூறினார்.
“அவசரத்தில் தான் கல்வி கற்கும் பாடசாலையில் பெயரைக் கூற மறந்துவிட்டா. இவவுக்குக் கிடைத்த பெருமை இறம்பைக்குளம் மகாவித்தியாலயத்துக்கும், வவுனியாவுக்கும் கிடைத்த பெருமையல்லவா?” என்று இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த மாணவியின் தயார் பெருமையுடன் சொன்னார்.
இவரைப்போல் யாழ் இந்துக் கல்லூரியில் அப்துல் கலாமிடம் துணிந்து கேள்வி கேட்டு அசத்திய 13 வயது மாணவன் சிவகுமாரன் ராகுலன் என்பவருக்கும் பரிசில்கள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இவர்களுக்கான பரிசுப் பொதியினை வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி வழங்கிவைக்க, யாழ் துணைத்தூதரக பிரதம அதிகாரி வி.மகாலிங்கம் தனிப்பட்ட வகையில் வழங்கிய பணப் பரிசினை, யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் வழங்கி வைத்தார்.இந்த இரண்டு மாணவர்களும் தொடர்ந்து கல்வியில் முன்னேறி அப்துல் கலாம் போன்று விஞ்ஞானிகளாகவேண்டும் என்று, இந்திய துணைத் தூதுரக பிரதம அதிகாரி வி.மகாலிங்கம் தமதுரையில் பாராட்டுத் தெரிவித்தார்.