அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நிறைவேற்றம்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் அறுதிப்பெரும்பான்மை  வாக்குகளினால் நாடாளுமன்றத்தில்  28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 215 பேர் வாக்களித்தனர். எதிராக சரத் வீரசேக எம்.பி வாக்களித்தார். ஜனநாயக தேசிய முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார எம்.பி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்த சட்டமூலத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தில் 27ஆம் திகதி சமர்ப்பித்து விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். நேற்று செவ்வாய்க்கிழமையும் விவாதம் நடத்தப்பட்டது.  இரண்டு நாட்கள் விவாதத்தின் பின்னர், வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவையமர்வு ஒரு மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டு, கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.

அதன்பின்னர் பெயர் கூப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுவர் சமூகமளிக்கவில்லை.பிரேமலால் ஜயசேகர, சுசந்த புஞ்சிநிலமே, ஜகத் பாலசூரிய, ஜனக்க பண்டார தென்னகோன், பசில் ராஜபக்ஷ, கெஹலிய ரம்புக்வெல, எல்லாவல மேதானந்த தேரர் சமூகமளிக்கவில்லை

Related Posts