பூநகரி வாடியடிச்சந்தியிலிருந்து பூநகரியின் ஏனைய கிராமங்களுக்குச் செல்வதற்கான பஸ் வசதியை ஏற்படுத்தித் தருமாறு அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கு அமைவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரனின் முயற்சியால் வெள்ளிக்கிழமை (24) அந்தப்பகுதிக்கு இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பூநகரியின் அயல் கிராமங்களிலிருந்து வாடியடிச்சந்திக்கு வரும் மக்கள் இதுவரை நாளும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். அத்துடன் பாடசாலை மாணவர்களும் பாடசாலைக்குச் செல்வதில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர். மக்களின் பிரச்சினைகளுக்கு இந்தப் பஸ் சேவையினூடாக தீர்வு கிடைத்திருப்பதாக பூநகரி மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
இந்தப் பஸ் சேவையானது நாள்தோறும் காலை வாடியடிச் சந்தியிலிருந்து ஆரம்பமாகி பூநகரி பரந்தன் வீதியூடாக நல்லூர், ஆலங்கேணி, சின்னப்பல்லவராயன்கட்டு, முட்கொம்பன், அரசபுரம், பள்ளிக்குடா, செட்டிக்குறிச்சி ஊடாக மீண்டும் வாடியடிச்சந்திக்கு வந்து சேரும். இவ் வீதிகளினூடாக நாள்தோறும் சேவை இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி மாவட்ட முகாமையாளர், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் அதிகாரிகள், பணியாளர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.