கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘உத்தமவில்லன்’ வருகிற மே 1-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்நிலையில், இப்படம் வெளியாவதில் சில பிரச்சினைகள் எழுந்தன. திட்டமிட்டபடி படம் வெளிவருமா? என்ற சந்தேகமும் எழுந்தது. இதுகுறித்து விளக்கமளிப்பதற்காக தமிழ் திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பாக தயாரிப்பாளர் சங்கம், கில்டு, வினியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் கூடி நேற்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இந்த கூட்டத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் பேசும்போது, உத்தமவில்லன் படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்கள் சங்கத்தின் முன் தீர்த்துக்கொள்ளப்பட்டது. இதனால் படம் திட்டமிட்டபடி மே 1-ந் தேதி வெளியாகும் என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் லிங்குசாமி பேசும்போது, உத்தமவில்லன் வெளியீடு தொடர்பாக எழுந்த பிரச்சனையை சுமூகமாக தீர்த்துக் கொண்டோம். விஸ்வரூபம் பிரச்சினையை, உத்தமவில்லன் படத்துடன் தொடர்புபடுத்தக்கூடாது என்றும் முடிவெடுத்துள்ளோம்.
‘உத்தமவில்லன்’ படம் பிரச்சினையில்லாமல் வெளியே வரவேண்டுமென்றால் எனக்கு இவ்வளவு பணம் வேண்டும் என்று ஒரு நபர் மிரட்டுவதாகவும் லிங்குசாமி கூறினார். ஆனால், அந்த நபர் யாரென்பதை அவர் வெளிப்படையாக கூறவில்லை.
இறுதியில், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.தாணு பேசும்போது, மே 1-ந் தேதி ‘உத்தமவில்லன்’ திட்டமிட்டபடி வெளிவரும். அதை யாராலும் தடுக்க முடியாது. இந்த தமிழ் புத்தாண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டாக அமையட்டும் என கூட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.